கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் டெங்கு தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை மொத்தம் 15,796 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட சுகாதார இணை இயக்குநர்களுக்கு புதிய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், நீர் தேங்கும் இடங்கள், குட்டைகள், ஓடைகள் போன்ற பகுதிகளில் மக்கள் செல்லாமல் இருக்கவும், வீடுகளின் அருகே தண்ணீர் தேங்காதவாறு சுத்தம் செய்யவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
உயிரிழப்புகளை தவிர்க்கும் பொருட்டு, சுகாதாரத்துறை அதிகாரிகள் நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகின்றனர்.
டெங்கு பரவலை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பே மிக முக்கியம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.