காரின் மீது சிறுநீர் கழித்த நபரை கண்டித்த இந்தியருக்கு நேர்ந்த சோகம்

கனடாவின் எட்மண்டனில் இயங்கி வரும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளரான அர்வி சிங் சாகூ (55), இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் கடந்த அக்டோபர் 19-ம் தேதி தனது மனைவியுடன் ஒரு உணவகத்தில் உணவருந்த சென்றுள்ளனர்.

அப்போது, 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் காரின் மீது சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ந்த அர்வி சிங் சாகூ, அந்த நபரிடம் “என்ன செய்கிறீர்கள்?” என அதட்டும் தொணியில் கேட்டுள்ளார்.

இதற்கு அந்த நபர் கடுமையான பதிலளித்து, “இங்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்… நீ இங்கு என்ன செய்கிறாய்?” என்றார். இதனால் இருவருக்கும் கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், சிறுநீர் கழித்த நபர் அர்வி சிங் சாகூவின் தலையில் அடித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, அர்வி சிங் சாகூவை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தது. சில நாட்களுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அர்வி சிங் சாகூ உயிரிழந்தார்.

இந்த தாக்குதலை நடத்திய குற்றவாளி கைல் பாபின் (40) கைது செய்யப்பட்டார். இவருக்கும் அர்வி சிங் சாகூவுக்கும் முன் எந்தவிதமான அறிமுகமும் இல்லை. அர்வி சிங் சாகூ உயிரிழந்ததையடுத்து, கைல் பாபின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அவர் நவம்பர் 4-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.

Related News

Latest News