14 ஆண்டுகள் கழித்து ‘இரட்டை குழந்தைகள்’ விபத்தில் ‘பைலட்’ உயிரிழந்த சோகம்

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து இந்தியா முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த சோகம் முடிவதற்குள் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே, ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஜூன் 15ம் தேதி டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கி, 7 பேருடன் ஆர்யன் ஏவியேஷன் என்னும் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. எதிர்பாராதவிதமாக கௌரிகுண்ட் காடுகளில் ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

37 வயதான பைலட் ராஜ்வீர் சிங் சவுகான் ஹெலிகாப்டரை இயக்கியுள்ளார். இதில் அவருடன் சேர்த்து 7 பேர் பயணம் செய்தனர். கேதார்நாத் பள்ளத்தாக்கின் மோசமான வானிலை காரணமாக,  இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தநிலையில் ஹெலிகாப்டரை இயக்கிய ராஜ்வீர் சிங்கின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமணமாகி 14 ஆண்டுகளுக்கு பிறகு, அண்மையில் தான் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதை பெரிதாக கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் ராஜ்வீர் முன்னின்று நடத்தி இருக்கிறார்.

அதன்படி வருகின்ற ஜூன் 30ம் தேதி விழாவை கொண்டாட திட்டமிட்டு இருந்தனர். அதற்கு முன்பே ஹெலிகாப்டர் விபத்தில் ராஜ்வீர் உயிரிழந்து இருக்கிறார். ராஜ்வீரின் மரணம் அவரது மொத்த குடும்பத்தினரையும் நிலைகுலைய வைத்துள்ளது.

ராணுவத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ராஜ்வீருக்கு, பல்வேறு வகையான ஹெலிகாப்டர்களை இயக்கிய அனுபவம் உள்ளது. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற ராஜ்வீர், கடந்த 2024ம் ஆண்டு முதல் ஆர்யன் ஏவியேஷன் நிறுவனத்தில், பைலட்டாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News