பிஹார் மாநிலத்தின் ரோட்டாஸ் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஆறுகள் வெள்ளப்பெருக்கால் நிரம்பியுள்ளன. இதன் விளைவாக, தேசிய நெடுஞ்சாலையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், டெல்லி–கொல்கத்தா நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ரோட்டாஸ் மாவட்டத்திலிருந்து அவுரங்காபாத் வரை சுமார் 65 கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சில கிலோமீட்டர் பயணத்துக்கே பல மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. நான்கு நாட்களாக நீடித்து வரும் இந்த நெரிசலில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. இதனால், லாரிகளில் உள்ள பழங்கள், காய்கறிகள், பால்வளப் பொருட்கள் போன்ற அழுகக்கூடிய பொருட்கள் பாதிக்கப்படுவதோடு, வணிகத்துறையிலும் பெரும் இழப்பு ஏற்படுகிறது.
மேலும், ஆம்புலன்ஸ் சேவைகள், அவசர உதவிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்கள் கூட நீண்ட நேரம் சாலையில் சிக்கி தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதுகுறித்து லாரி ஓட்டுநர் ப்ரவீன் சிங், ’30 மணி நேரத்தில் 7 கிலோமீட்டர் மட்டுமே நகர்ந்துள்ளோம். போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் நீடிப்பதால், போக்குவரத்து எப்போது சீராகும் என்பது தெரியாத நிலை உள்ளது. இதனால் வணிகம், அத்தியாவசிய சேவைகள், பொதுமக்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன என கூறப்படுகிறது.