TNPSC தேர்வுகளில் யாருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று விதிமுறைகளை திருத்தி தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதன் அடிப்படியில் இதற்கான விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரை முழுவதுமாக தமிழ் மொழியில் கல்வி பயின்றவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமல்லாமல் 1ம் வகுப்பில் பள்ளியில் சேராமல், வயதின் அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8 வரையிலான வகுப்புகளில் நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து, தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை தரப்படும் என்றும் அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மற்ற மாநிலங்களில் தமிழ் மொழியைப் பயிற்று மொழியாக கற்று, பின்னர் தமிழ்நாட்டில் தங்களது கல்வியை தமிழ் வழியில் தொடர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
அதே நேரத்தில் இதர மொழிகளைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித்து, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இந்த முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியானவர் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளிக்குச் செல்லாமல் நேரடியாக தனித்தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படாது என்று தகவல்கள் சொல்கின்றன.
கல்வி மற்றும் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள் என்பதை நியமன அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற உத்தரவின்படி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டிருப்பது தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.