திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கொன்ற கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. S.S.I சண்முகவேல் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அலங்கியம் தளவாய் பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் உடுமலை அடுத்த குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்றிரவு ரோந்து பணியிலிருந்துபோது, குடிமங்கலம் பகுதியில் உள்ள தோட்டத்தில் தகராறு நடப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது.
ரோந்து பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அங்கு சென்று பார்த்தபோது, தந்தையும் மகனும் அறிவாளுடன் சண்டையிட்டு கொண்டிருந்தனர். சண்முகவேல் அவர்களை தடுக்க முற்பட்டபோது குடிபோதையில் இருந்த தந்தை, தடுக்க வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை அறிவாளால் வெட்டியதில் தலை துண்டித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த குடிமங்கலம் போலீசார், சிறப்ப உதவி ஆய்வாளர் சண்முகவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த தோட்டமானது அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனுக்கு சொந்தமானது என்றும் அங்கு பணியாற்றி வந்த தந்தை, மகனுக்கு ஏற்பட்ட தகராறை தடுக்கச் சென்றபோது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெட்டி கொலை செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தலைமறைவான தந்தை மூர்த்தி மற்றும் தங்கபாண்டியன், மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.