மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள உச்சகட்ட பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக ஒரு மிக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரானுக்குக் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்துவிட்டது என்றும், இனி சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்கா காத்திருக்கப் போவதில்லை என்றும் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரான் பிரதிநிதிகளுக்கு இடையே சுமார் 21 மணி நேரம் நீடித்த மாரத்தான் பேச்சுவார்த்தை, எந்தவித ஒப்பந்தமும் இன்றி தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்ற அமெரிக்காவின் முதன்மை நிபந்தனையை ஏற்க மறுத்ததே இந்த பேச்சுவார்த்தை முறிவிற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. ஈரானிய தரப்போ, லெபனானில் உடனடியாகப் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் மற்றும் சர்வதேச அளவில் முடக்கப்பட்டிருக்கும் தங்களின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளில் பிடிவாதமாக இருந்தது.
இது குறித்துப் பேசிய துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், “ஈரான் அணு ஆயுதங்களை அடைவதற்கான எந்த ஒரு முயற்சியையும் அமெரிக்கா அனுமதிக்காது என்பதில் அதிபர் ட்ரம்ப் உறுதியாக இருக்கிறார்” என்று தெரிவித்தார். 21 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ஒருமித்த கருத்து எட்டப்படாததால், பேச்சுவார்த்தைக் குழுவினர் தற்போது நாடு திரும்பியுள்ளனர்.
இதற்கிடையில், ஈரான் மீது அமெரிக்கா அணுஆயுதத் தாக்குதலை நடத்துமா என்ற கேள்விக்கு அதிபர் ட்ரம்ப் மிகவும் நுணுக்கமான பதிலை அளித்துள்ளார். அணுஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும், சாதாரண வான்வழித் தாக்குதல்கள் மூலமாகவே ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் வான் பாதுகாப்பு கட்டமைப்புகளை அமெரிக்கா ஏற்கனவே நிலைகுலையச் செய்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
“ஈரான் ஏற்கனவே ராணுவ ரீதியாகப் பலவீனமடைந்துவிட்டது, எனவே அணுஆயுதப் பயன்பாடு என்பது தேவையற்றது” என்று கூறிய ட்ரம்ப், ஈரானிடம் தற்போது சர்வதேச நீர்ச்சந்திகளை முடக்கி மிரட்டுவதைத் தவிர வேறு எந்த துருப்புச் சீட்டும் இல்லை என்று விமர்சித்துள்ளார். மிக முக்கியமாக, உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீர்ச்சந்தியை, ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து திறந்தே தீரும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க அமெரிக்கக் கடற்படை மற்றும் விமானப்படை தயார் நிலையில் இருப்பதாகவும், இனிமேல் ஈரான் தரப்பில் இருந்து காலதாமதம் ஏற்பட்டால் அதற்கான விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் என்றும் அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ட்ரம்பின் இந்த “Time is running out” எச்சரிக்கை, மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் ஒரு பெரும் போர் மூழுமோ என்ற அச்சத்தை உலக நாடுகள் மத்தியில் விதைத்துள்ளது.
