Saturday, December 27, 2025

ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடி : அதிமுகவினர் உட்பட 3 பேர் கைது

விருதுநகரில் இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என ஆசை வார்த்தை கூறி பல கோடி பணம் மோசடியில் ஈடுபட்ட அதிமுகவை சேர்ந்த இருவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் அதிமுக நிர்வாகியும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளரான பட்டுராஜன்(52,) அதிமுக உறுப்பினர் கந்தநிலா (55) மற்றும் ராணி நாச்சியார் ( 53) மற்றும் சிலர் இணைந்து தனியார் அறக்கட்டளை (டிரஸ்ட்) நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என்று ஆசை வார்த்தை கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலரிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து பணத்தை இழந்த வெம்பக்கோட்டையை சேர்ந்த பழனியப்பன் மாவட்ட சிபிசிஐடி போலீஸில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விருதுநகர் சிபிசிஐடி போலீஸார் அதிமுக நிர்வாகிகளான பட்டுராஜன், கந்தநிலா, ராணி நாச்சியார் ஆகிய மூவரை பிடித்து நடத்திய விசாரணையில் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மூவர் மீதும் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இரிடியம் மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள பட்டுராஜன், சேத்தூர் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர், சேத்தூர் பேரூராட்சி 8 வது வார்டு கழகச் செயலாளர், செட்டியார்பட்டி பேரூராட்சி பூத் கமிட்டி பொறுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News