Saturday, April 19, 2025

IPL வரலாற்றில் ‘தடை’ விதிக்கப்பட்ட ‘அந்த’ 4 வீரர்கள்..

இந்த 2025ம் ஆண்டில் IPL தொடர் 18வது வயதில் அடியெடுத்து வைக்கிறது. ஆரம்பத்தில் 8 அணிகள் தான் இருந்தன. 3 ஆண்டுகளுக்கு முன்னர் 2 அணிகள் புதிதாக இணைக்கப்பட, தற்போது 10 அணிகள் விளையாடி வருகின்றன.

நடப்பு IPL தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 2 மாதங்கள் நடைபெற்றாலும் கூட, ரசிகர்கள் மத்தியில் இந்த தொடருக்கென தனித்த வரவேற்பு இருக்கிறது. இதற்கு BCCI அவ்வப்போது புகுத்தும் புதிய விதிமுறைகளும் ஒரு காரணமாகும்.

இந்த தொடரில் கூட ஏகப்பட்ட புதிய விதிகளை BCCI அறிமுகப்படுத்தி வீரர்கள், ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளது. இதில் ஒரு விதியின் காரணமாக இங்கிலாந்து வீரர் Harry Brook, 2 ஆண்டுகள் IPL தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் காயம் அடைந்தால் மட்டுமே, தொடரில் இருந்து விலக வேண்டும். சொந்த காரணங்களால் விலகினால் அவர்கள் 2 ஆண்டுகள் IPL விளையாட முடியாது. டெல்லி அணியால் ஏலத்தில் வாங்கப்பட்ட Harry Brook சொந்த காரணத்தால் விலகியதால், அடுத்த 2 வருடங்களுக்கு அவரால் இந்த தொடரில் பங்குபெற முடியாது.

அந்தவகையில் இதுவரை IPL தொடரில் தடை விதிக்கப்பட்ட வீரர்கள் குறித்து இங்கே பார்க்கலாம். IPL ஆரம்பித்த 2008ஆம் ஆண்டிலேயே, ஹர்பஜன் சிங் தடை செய்யப்பட்டார். மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையிலான போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகொடுத்துக் கொண்டனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஶ்ரீசாந்த் கன்னத்தில், ஹர்பஜன் சிங் ஓங்கி அறைந்தார்.

அவமானத்தால் அந்த இடத்திலேயே ஶ்ரீசாந்த் கண்ணீர் விட்டு அழுக, இது கிரிக்கெட் வட்டாரத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோசமான செயலுக்காக 2008ம் ஆண்டின், எஞ்சிய IPL போட்டிகளில் விளையாட ஹர்பஜன் சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டது.

IPL விதிமுறைப்படி, ஒரு வீரர் இடம் மாறுவது குறித்து சம்மந்தப்பட்ட இரு அணிகள்தான் முதலில் பேச வேண்டும். குறிப்பாக BCCIயிடம் இதுகுறித்து முன்பே தெரிவிக்க வேண்டும்.

ஆனால், 2010ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ரவீந்திர ஜடேஜா, நேரடியாக மும்பை இந்தியன்ஸுடன் பேச்சு வார்த்தை நடத்தி, ஒப்பந்தமும் செய்துகொண்டார். இந்த விவரம் BCCIக்குத் தெரிய வர, 2010ம் ஆண்டு IPL சீசனில் ஜடேஜாவுக்குத் தடை விதித்தது.

BCCI விதிமுறைப்படி, ஓய்வுபெறாத இந்திய வீரர் மற்ற டி20 லீக் தொடர்களில் விளையாடிவிட்டு, IPL தொடரிலும் விளையாட முடியாது. கொல்கத்தா அணியின் வீரராக இருந்த பிரவீன் தாம்பே 2020ஆம் ஆண்டில், கரீபியன் பிரிமியர் லீக் மற்றும் அபுதாபி டி10 லீக் ஆகிய போட்டிகளில், BCCIஅனுமதி இன்றி பங்கேற்றார்.

தொடரில் விளையாடிவிட்டு, மீண்டும் கொல்கத்தா அணிக்கு திரும்பினார். இதனை BCCI ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவரை 2010ம் ஆண்டு IPL தொடரில் இருந்து தடை செய்தது. மேற்கண்ட அனைவருமே இந்திய வீரர்கள். ஆனால் வெளிநாட்டு வீரர் ஒருவர் IPL தொடரில் விளையாடிட, 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படுவது, இதுவே முதன்முறையாகும்.

Latest news