ஈரான் நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்ட காரணங்களால் கோபமடைந்த மக்கள், அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரானின் 30க்கும் மேற்பட்ட மாகாணங்களில், சுமார் 100 நகரங்களில் இந்த போராட்டங்கள் இன்றும் நீடித்து வருகின்றன. நிலைமையை கட்டுப்படுத்த அரசு பாதுகாப்புப் படையினரை களமிறக்கியுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
வன்முறைகளை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல பகுதிகளில் இணைய சேவையும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரான பின்னர் இணைய சேவை மீண்டும் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில அரசு ஊடகங்களுக்கு மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரசுக்கு எதிரான போராட்டங்களில் இதுவரை 3,428 பேர் உயிரிழந்துள்ளதாக, நார்வேயை அடிப்படையாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதேபோல், போராட்டத்தில் ஈடுபட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், ஈரான் அரசு தொலைக்காட்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போது ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில், அவரது காதில் குண்டு உரசி சென்றது. அந்த கொலை முயற்சியில் ட்ரம்ப் உயிர் தப்பினார்.
தற்போது, காயத்துடன் கூட்டத்தில் ட்ரம்ப் நிற்கும் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஈரான் அரசு ஊடகம், இந்த முறை குறி தப்பாது எனக் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஈரான் மக்கள் படுகொலைகளை நிறுத்தாவிட்டால் அந்த நாட்டுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். இந்த பின்னணியில்தான், ட்ரம்புக்கு எதிரான ஈரான் அரசு ஊடகத்தின் மிரட்டல் தகவல் வெளியாகியுள்ளது.
