சென்னையில் தங்க விலையேற்றம் புதன் கிழமை அதாவது நேற்று வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்க விலை, வர்த்தக சந்தையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காலையில் சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்த நிலையில், மாலையில் மேலும் 680 ரூபாய் உயர்ந்து, சவரன் 91 ஆயிரத்து 80 ரூபாயை எட்டியது. இதேபோல், ஒரு கிராம் தங்கம் 11 ஆயிரத்து 385 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி ஒரு கிராம் தங்கம் 7,100 ரூபாய் இருந்த நிலையில், இப்போது 39.9 சதவிகிதம் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவிப்பது, தனியார் முதலீடுகள் அதிகரித்திருப்பது ஆகியவை இந்த உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகின்றன. குறிப்பாக, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3.55 லட்ச ரூபாயை தாண்டியுள்ளது.
தங்க விலை சவரனுக்கு 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரமாக உயர 10 மாதங்கள் எடுத்த நிலையில், பின்னர் ஒவ்வொரு 2 மாதத்திற்கும் சராசரியாக 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்தது. ஆனால், சமீபத்தில் ஒரு மாதத்திற்குள் 80 ஆயிரத்திலிருந்து 90 ஆயிரத்தை கடந்தது. செப்டம்பரில் மட்டும் தங்கம் 12 சதவிகிதம் உயர்ந்தது என்பது வரலாற்றிலேயே அதிகபட்சம்.
உலக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், உக்ரைன்-காசா போர், அமெரிக்க அரசாங்க முடக்கம் ஆகியவற்றால் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக பல நாடுகள் பார்க்கின்றன. டாலரின் மதிப்பு குறையவும், சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தங்கத்தை அதிகம் குவிக்கவும் செய்வதால் விலை மேலும் ஏறுகிறது. நிபுணர்கள், இம்மாத இறுதிக்குள் தங்கம் சவரனுக்கு 1 லட்ச ரூபாய் வரை செல்லக்கூடும் என கணிக்கின்றனர்.