தங்கத்தின் விலை நாளுக்கு நாள் வானளாவிய உச்சத்தை தொட்டு வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருமணம் முதல் எந்த ஒரு சுப நிகழ்ச்சி வரை எந்த விசேஷமாக இருந்தாலும், தங்க நகைகள் முக்கிய இடம்பிடிப்பது வழக்கம். சிலருக்கு அது ஆடம்பரத்தின் அடையாளமாக இருந்தாலும், பெரும்பான்மையான நடுத்தர குடும்பங்களுக்கு தங்கமே மிகப்பெரிய சேமிப்பாக கருதப்படுகிறது.
அட்சய திருதியை, தீபாவளி போன்ற பண்டிகை மற்றும் மங்கள நாள் பார்த்து தங்கம் வாங்கும் சாமானியர்கள், தற்போதைய விலை நிலவரத்தால் கவலை அடைந்துள்ளனர். வருடா வருடம் தங்கம் விலை உயர்வது சாதாரணம் என்றாலும், கடந்த சில மாதங்களாக திடீரென கூடியிருக்கும் விலை உயர்வு, குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களை பெரும் சிக்கலில் தள்ளியுள்ளது. தற்போது ஒரு சவரன் தங்கம் 90 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ள நிலையில், வரவிருக்கும் பண்டிகை நாட்கள் மேலும் கவலையை அதிகரிக்கிறது.
தங்கம் விலை அதிகரிக்க பல காரணங்கள் கூறப்படுகின்றன. உலக நாடுகள் அதிகளவில் தங்கத்தை குவிப்பது, தனியார் முதலீடுகள் அதிகரிப்பு, அமெரிக்கா விதித்துள்ள 50% இறக்குமதி வரி, டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைதல், இஸ்ரேல்–ஹமாஸ் மோதல், ரஷ்யா–உக்ரைன் போர் போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன.
இதில், டாலருக்கு மாற்றாக அரசுகள் தங்கத்தை வாங்குவது விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம் என பொருளாதார நிபுணர் நாகப்பன் என்பவர் விளக்குகிறார். வருங்கால மாதங்களிலும் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
மேலும், வெள்ளியின் விலையும் கூடிவருகிறது. முதலீடுகள் அதிகரித்திருப்பதுடன், மின்சார வாகன பேட்டரிகளில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்திருப்பதும் அதன் விலை உயர்விற்கு காரணமாகக் கூறப்படுகிறது. தங்கமும், வெள்ளியும் ஒருசேர அதிகரிக்கும் சூழலில், ‘இனி நாங்கள் தங்கம் வாங்க இயலுமா?’ என்பதே சாமானியர்களின் கவலையாக மாறியுள்ளது.