உங்களுடைய கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இது தான் ஒரே வழி..!

கொழுப்பு கல்லீரல் நோய் (Fatty Liver Disease) சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. உலகளவில் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் இந்த நிலை, பெரும்பாலும் உடல் பருமன், டைப் 2 நீரிழிவு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் அதிக அளவில் மது அருந்துதல் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.

இந்த நோய் ஆரம்ப நிலையில் தெளிவான அறிகுறிகள் இல்லாமல் இருக்கும். சிலருக்கு சோர்வு, வயிற்றுப் பகுதியில் அசௌகரியம் போன்ற லேசான அறிகுறிகள் மட்டுமே தோன்றலாம். ஆனால் சரியான கவனம் மற்றும் சிகிச்சை இல்லையெனில், இது சிரோசிஸ் போன்ற கடுமையான கல்லீரல் பாதிப்புகளுக்குக் காரணமாக மாறலாம்.

கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், கொழுப்பு கல்லீரல் பாதிப்பை குறைக்கவும் சில உணவுமுறை மாற்றங்கள் முக்கியமானவை என All India Institute of Medical Sciences (AIIMS) மருத்துவமனையைச் சேர்ந்த இரைப்பை-குடல் நிபுணர் டாக்டர் சௌரப் தெரிவித்துள்ளார். அவர் பரிந்துரைக்கும் சில உணவுகள் பின்வருமாறு:

பிளாக் காபி

காபி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற பொதுவான கருத்து இருந்தாலும், பிளாக் காபி ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தது. இது கல்லீரலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதைத் தடுப்பதன் மூலம் கொழுப்பு கல்லீரல் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

Also Read : இதையெல்லாம் செய்தால் உங்களின் கல்லீரல் காலியாயிடும்

மீன்

சால்மன், மத்தி போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை அழற்சியை குறைக்கும் தன்மை கொண்டவை. தொடர்ந்து இம்மீன்களை உணவில் சேர்த்தால், கல்லீரலில் உள்ள டிரைகிளிசரைடு அளவு குறைந்து, கொழுப்பு கல்லீரல் அபாயம் தடுக்கப்படும்.

கீரை வகைகள்

நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்த கீரைகள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லவை. இவை கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கின்றன. மேலும் குளோரோபில் போன்ற கூறுகள் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் கன உலோகங்களை வெளியேற்ற உதவி செய்து, கல்லீரலின் நச்சுநீக்கும் பணியை எளிதாக்குகின்றன.

பருப்பு வகைகள்

நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, கொழுப்பு கல்லீரல் ஏற்படுவதைத் தடுக்க உதவுகின்றன.

Also Read : இந்த ஜூஸ் மட்டும் போதும்.. கல்லீரலும் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்

பெர்ரி வகை பழங்கள்

ஆண்டி-ஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பெர்ரி பழங்கள் கல்லீரல் வீக்கத்தை குறைக்கின்றன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கல்லீரல் செல்கள் சேதமடைவதைத் தடுக்கும்.

தவிர்க்கவேண்டியவை

பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை பானங்களை தவிர்ப்பது மிகவும் அவசியம். சரியான உணவுமுறையைப் பின்பற்றுவதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாத்து, கொழுப்பு கல்லீரல் நோய் அபாயத்தை குறைக்க முடியும்.

Related News

Latest News