தமிழ்நாட்டில் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்யும் வியாபாரிகள் கட்டாயமாக உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்புத் துறையிடம் உரிமம் பெற்றால் மட்டுமே இடியாப்பம் விற்பனை செய்ய வேண்டும் என்றும், இந்த உரிமத்தை ஆன்லைன் மூலம் இலவசமாகப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் தரமற்ற இடியாப்பம் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் படி, சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்யும் அனைவரும் அவசியமாக லைசன்ஸ் பெற வேண்டும்.
இந்த லைசன்ஸ் ஆன்லைன் வழியாக மட்டுமே வழங்கப்படும் என்றும், அதை ஒவ்வொரு ஆண்டும் உணவு பாதுகாப்புத் துறையிடம் புதுப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உணவு பாதுகாப்புத் துறை வகுத்துள்ள விதிமுறைகளின்படி இடியாப்பம் தயாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இடியாப்பம் தயாரிக்கும் போது கைகளில் கையுறை அணிவது, தலையில் தலைமூடி பயன்படுத்துவது போன்ற சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல், காய்ச்சல், தொற்றுநோய் பாதிப்பு அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் இடியாப்பம் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட வேண்டாம் என்றும் உணவு பாதுகாப்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
