தமிழ் மொழி, இலக்கியம், சமூக சிந்தனை, பண்பாட்டு வளர்ச்சி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது, ஈ.வெ.ரா. விருது, அம்பேத்கர் விருது, அண்ணாதுரை விருது, காமராஜர் விருது, பாரதியார் விருது, பாரதிதாசன் விருது, திரு.வி.க. விருது, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, கலைஞர் கருணாநிதி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கான விருதாளர்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
தமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகள் வழங்கும் விழா இன்று (ஜனவரி 16) காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றி வரும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், திருவள்ளுவர் விருதை பேராசிரியர் சத்தியவேல் முருகனாருக்கும், ஈ.வெ.ரா. விருதை வழக்குரைஞர் அருள்மொழிக்கும், அம்பேத்கர் விருதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வனுக்கும் வழங்கினார். அண்ணாதுரை விருது அமைச்சர் துரைமுருகனுக்கும், காமராஜர் விருது எழுத்தாளர் இதயத்துல்லாவுக்கும், பாரதியார் விருது கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கும், பாரதிதாசன் விருது கவிஞர் யுகபாரதிக்கும் வழங்கப்பட்டது.
திரு.வி.க. விருது முன்னாள் தலைமைச் செயலர் இறையன்புவுக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பேராசிரியர் செல்லப்பாவுக்கும், கலைஞர் கருணாநிதி விருது எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், ஆய்வாளர் என பன்முகத் திறன் கொண்ட விடுதலை விரும்பிக்கும் வழங்கப்பட்டது.
இதேபோல், இலக்கிய மாமணி விருதுகளின் கீழ் மரபு தமிழ் விருது எழுத்தாளர் ராமலிங்கத்துக்கும், ஆய்வு தமிழ் விருது எழுத்தாளர் மகேந்திரனுக்கும், படைப்புத் தமிழ் விருது எழுத்தாளர் நரேந்திரகுமாருக்கும் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு விருதாளருக்கும் ரூ.5 லட்சம் ரொக்கத் தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, விருதாளர்களுக்கு தகுதியுரை வாசிக்கப்பட்டு, பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர்.
விழாவில் குறிப்பிடத்தக்க அம்சமாக, முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு, தனக்கு வழங்கப்பட்ட ரூ.5 லட்சம் பரிசுத் தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
