உடலுக்கு கொழுப்பு அவசியமானது, ஆனால் அதன் அளவு அதிகமாக இருப்பது ஆபத்தானது. குறிப்பாக எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு 100-க்குள் இருக்க வேண்டும். இதைத் தாண்டினால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
கொழுப்பு அதிகரிக்கும் போது உடல் உறுப்புகள் அறிகுறிகளை வெளிப்படுத்தும். உடனடியாக கவனித்து மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
கொழுப்பு அதிகரிப்பின் அறிகுறிகள்
உடலில் கொழுப்பு அளவு அதிகரிக்கும்போது கால்களில் வலி மற்றும் தசை பிடிப்பு ஏற்பட தொடங்கும். இதன் காரணமாக அந்த பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும். நடக்கும்போதோ அல்லது ஓய்வெடுக்கும்போதோ கால்களில் வலி அல்லது தசை பிடிப்பு ஏற்படும்.
மார்பில் வலியோ அல்லது அழுத்தத்தையோ உணர்ந்தால் அது கொழுப்பு அதிகரிப்பின் வெளிப்பாடாக இருக்கலாம். இதய தமனிகளில் கொழுப்பு குவிவது மார்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
கொழுப்பு அதிகரித்தால், கழுத்தை சுற்றி வலி உண்டாகும். கழுத்தைச் சுற்றி மட்டுமின்றி தாடை மற்றும் தோள்பட்டைகளில் அசாதாரண வலியை உணரலாம்.
தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வு அல்லது தலைச்சுற்றல் ஆகியவை கொழுப்பு அதிகரித்திருப்பதன் அறிகுறியாக இருக்கலாம்.
படிக்கட்டுகளில் ஏறும் போது மூச்சுத் திணறல் ஏற்படுதல் அல்லது சோர்வாக உணருதல், அதிகரித்த கொழுப்பின் வெளிப்பாடாக இருக்கலாம்.
இந்த அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
