தமிழ்நாட்டில் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 16 லட்சம் பெண்கள் மாதா மாதம் ரூ.1000 வாங்கி வருகின்றனர்.
மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் எங்களுக்கும் உரிமைத் தொகை கிடைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு அதில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இதில் இதுவரை 28 லட்சம் மகளிர் விண்ணப்பித்துள்ளனர். நவம்பர் 30-ந்தேதிக்குள் விண்ணப்பங்களை பரிசீவித்து முடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே விண்ணப்பங்களை நிராகரிப்பதாக பொது மக்கள் பலர் அமைச்சர்களிடம் முறையிட்டு வந்தனர்.
இந்நிலையில் வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து மற்ற குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க நிதித்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் புதிய பயனாளிகளுக்கு டிசம்பரில் இருந்து மகளிர் உரிமைத் தொகை கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.
