இன்றைய நவீன காலக்கட்டத்தில் கண்களின் பங்கு மிக முக்கியமானது. மொபைல், லேப்டாப்பு, டிவி போன்ற டிஜிட்டல் திரைகள் நம் அன்றாட வாழ்வில் அங்கமாகி விட்டன. ஆனால் இவை தவறான முறையில் பயன்படுத்தப்படும்போது, பார்வைத் திறன் மெதுவாகக் குறைவடைகிறது.
கண் பாதிப்புக்கான மூன்று முக்கியமான தினசரி தவறுகள்
பயணத்தின் போது படிப்பது அல்லது மொபைல் பயன்படுத்துவது
பலர் பஸ்சிலும், ரயிலிலும், காரிலும் பயணத்தின் போது புத்தகம் படிக்கிறார்கள், மொபைல் பார்க்கிறார்கள் அல்லது லேப்டாப்பில் வேலை செய்கிறார்கள். ஆனால், வாகனம் நகரும் போது கண்களும் உடலும் இடைவிடாது அசைவதால், எழுத்துக்கள் நிலைத்த நிலையில் தெரியாமல் போகிறது. இதனால் கண்களுக்கு அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கண் அழுத்தம் அதிகரித்தல், கண் வலி, மங்கலான பார்வை, தலைவலி போன்றவை ஏற்படும்.
குறைந்த வெளிச்சத்தில் படிப்பது
படிக்கும் போது அல்லது டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்தும் போது, வெளிச்சம் சரியான அளவில் இல்லாவிட்டால் அது கண்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
குறைந்த வெளிச்சத்தில் எழுத்துக்களை தெளிவாகப் பார்க்க கண்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.
இதனால் கண் சோர்வு, எரிச்சல், தலைவலி ஏற்படும். அதே நேரத்தில் அதிக வெளிச்சமும் ஆபத்துதான். எனவே மிதமான மற்றும் சீரான வெளிச்சத்தில் வேலை செய்யுங்கள். இயற்கை சூரிய ஒளி அறைக்குள் நுழையும் வகையில் ஏற்பாடு செய்யுங்கள்.
தவறான உடல் தோரணை
படிக்கும் போது அல்லது மொபைல்/லேப்டாப்பைப் பயன்படுத்தும் போது தவறான உடல் நிலையைப் பின்பற்றுவது கண்களுக்கு மட்டும் அல்ல, உடலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த தவறான நிலை கண்களுக்கு கூடுதல் சுமையை தரும்.
என்ன செய்யலாம்?
கண்கள் வாழ்க்கையின் முக்கியமான உறுப்புகளில் ஒன்று. தவறான பழக்கங்கள், மெதுவாக கண்களின் செயல்பாடுகளை பாதிக்கும். எனவே சரியான உடல் தோரணையைப் பின்பற்றுங்கள். படிக்கும் போது சரியான வெளிச்சம் இருக்கட்டும். பயணத்தின் போது படிப்பதை தவிர்க்கவும்.
இவ்வாறு எளிய நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் பார்வையை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.