Thursday, February 26, 2026

இந்த 12 வலிகளை அலட்சியம் செய்யவே கூடாது., இல்லையென்றால் ஆபத்துதான்..!

உடலில் ஏற்படும் வலிகளை பலர் சாதாரணமாக எடுத்துக்கொண்டு அலட்சியம் செய்து விடுகிறார்கள். ஆனால் சில வலிகள், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நோய்களின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். ஒருபோதும் உதாசீனம் செய்யக்கூடாத 12 முக்கிய வலிகள் மற்றும் அவை சுட்டிக்காட்டும் உடல்நலப் பிரச்சனைகள் குறித்து இங்கே பார்க்கலாம்:

மார்பு வலி

மார்பில் அடிக்கடி வலி ஏற்படுவது கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறியாகும். குறிப்பாக அந்த வலி இடது கை அல்லது தாடை பகுதிக்கு பரவினால், இதயக்கோளாறு அல்லது மாரடைப்பு ஏற்படுவதற்கான எச்சரிக்கையாக இருக்கலாம். உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.

வயிற்று வலி அல்லது வயிற்று பிடிப்பு

திடீரென ஏற்படும் வயிற்று வலி அல்லது பிடிப்பு, குடல் புண், பித்தப்பை கோளாறு அல்லது அல்சர் போன்ற பிரச்சனைகளை குறிக்கலாம். சில சமயங்களில் அவசர சிகிச்சை தேவைப்படலாம்.

கால் வலி

காலின் பின் பகுதியில் வீக்கம், இறுக்கம், வெப்பம் போன்ற உணர்வுகளுடன் வலி இருந்தால், ரத்த உறைவு (Blood Clot) ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இதை அலட்சியம் செய்தால் உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும்.

பல் வலி

பல்லில் தொடர்ந்து வலி இருந்தால், ஈறுகளில் தொற்று இருப்பதைக் குறிக்கலாம். சிகிச்சை பெறாமல் விட்டால், அந்த தொற்று மற்ற பற்களுக்கும் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது.

கால்கள் அல்லது பாதங்களில் எரிச்சல்

கால்கள் அல்லது பாதங்களில் அடிக்கடி எரிச்சல் உணர்வு ஏற்பட்டால், நரம்பு பாதிப்பு, ரத்த ஓட்டக் குறைபாடு அல்லது வைட்டமின் பி குறைபாடு காரணமாக இருக்கலாம்.

திடீர் தோள்பட்டை வலி

தோள்பட்டையில் திடீரென ஏற்படும் வலி, சில நேரங்களில் நுரையீரல் அல்லது பித்தப்பை தொடர்பான பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம்.

திடீர் தலைவலி

இதுவரை அனுபவிக்காத அளவுக்கு திடீரெனவும் கடுமையாகவும் தலைவலி ஏற்பட்டால், மூளையில் ரத்தக்கசிவு, பக்கவாதம் அல்லது ரத்த அழுத்த மாற்றங்கள் போன்ற ஆபத்தான நிலைகளை சுட்டிக்காட்டலாம்.

கழுத்து வலி மற்றும் காய்ச்சல்

கழுத்தை அசைக்க முடியாத அளவுக்கு வலி மற்றும் அதனுடன் காய்ச்சல் இருந்தால், அது மெனின்ஜைட்டிஸ் என்ற உயிருக்கு ஆபத்தான நோயின் அறிகுறியாக இருக்கலாம். உடனடி சிகிச்சை அவசியம்.

முதுகு வலி (கீழ்பகுதி அல்லது நடுப்பகுதி)

முதுகின் கீழ்பகுதி அல்லது நடுப்பகுதியில் தொடர்ந்து வலி இருந்தால், முதுகுத்தண்டுவட பிரச்சனை, உட்புற நோய்த்தொற்று அல்லது சிறுநீரக கோளாறு காரணமாக இருக்கலாம்.

பாத வலி அல்லது உணர்விழப்பு

பாதங்களில் முள் குத்துவது போன்ற உணர்வு, உணர்விழப்பு அல்லது கடுமையான வலி ஆகியவை நீரிழிவு நோய் அல்லது நரம்பு சேதத்தின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

கண் வலி

கண்களில் வலி, அழுத்தம் அல்லது பார்வை மங்கல் இருந்தால், குளோக்கோமா அல்லது கண் தொற்றுகள் காரணமாக இருக்கலாம். கண் மருத்துவரை உடனே சந்திக்க வேண்டும்.

காது வலி மற்றும் சீழ் வெளியேறுதல்

காது வலியுடன் காய்ச்சல் அல்லது சீழ் வெளியேறுதல் ஏற்பட்டால், அது கடுமையான நோய்த்தொற்றின் அறிகுறியாகும். அந்த தொற்று தாடை, தொண்டை அல்லது மூக்கு பகுதிகளுக்கு பரவக்கூடும்.

உடல் அளிக்கும் இத்தகைய எச்சரிக்கை அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது. எந்தவொரு வலியும் தொடர்ச்சியாக நீடித்தால், தாமதமின்றி மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம்.

Related News

Latest News