தேனி டூ வாஷிங்டன்.. அமெரிக்க தலைநகரை ஆளப்போகும் தமிழ் பெண்

அமெரிக்காவில் பல பெரிய நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளில் இந்தியர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். சத்திய நாதெல்லா மற்றும் சுந்தர் பிச்சை போன்றோர் இதற்கு எடுத்துக்காட்டுகள். டெக் துறையைத் தாண்டியும், அமெரிக்க அரசியலிலும் இந்திய வம்சாவளியினரின் பங்கு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டன் D.C.-இல் நடைபெறவுள்ள மேயர் தேர்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் பிறந்த ரினி சம்பத் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.

31 வயதான ரினி சம்பத், 7 வயதில் தனது பெற்றோருடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். தற்போது வாஷிங்டன் டிசி மேயர் தேர்தலில் போட்டியிடும் முதல் தெற்காசிய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மேயர் தேர்தலில் போட்டியிட தேவையான 4500 வாக்காளர்களின் கையெழுத்துகளைப் பெற வேண்டும். ஆனால் ரினி சம்பத் இதைவிட இரட்டிப்பு அளவிலான கையெழுத்துகளை சேகரித்து சமர்ப்பித்துள்ளார். இதனால், அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது. இவர் Democratic Party சார்பில் போட்டியிடுகிறார்.

ஜூன் 16ஆம் தேதி நடைபெறும் முதன்மை தேர்தலில் அவர் வெற்றி பெற்றால், நவம்பர் மாதத்தில் நடைபெறும் இறுதி மேயர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அதிகரிக்கும்.

தெற்காசிய சமூகத்தின் பங்களிப்பு அமெரிக்க பொருளாதாரத்தில் அதிகமாக இருந்தாலும், அரசியலில் அவர்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது என்று ரினி சம்பத் கூறுகிறார். இந்த தேர்தலில் தன் பங்கேற்பு, தெற்காசிய வம்சாவளியினருக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்றும் அவர் நம்புகிறார்.

மேலும், மக்களின் அடிப்படை தேவைகள், சாலைகள் மேம்பாடு, குடிநீர் வசதி, மற்றும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பது போன்ற விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

அவர் University of Southern California-இல் கம்யூனிகேஷன் துறையில் பட்டம் பெற்றுள்ளார். மாணவர் உரிமைகள் மற்றும் பல்கலைக்கழக பாதுகாப்பு குறித்து குரல் கொடுத்ததன் மூலம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார்.

1975ஆம் ஆண்டிலிருந்து வாஷிங்டன் டிசி நிர்வாகம் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், இந்த தேர்தலில் ரினி சம்பத் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News