கர்நாடக மாநிலம், பெங்களூரு குண்டலஹள்ளி பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், நண்பர்கள் உட்பட 8 பேருடன் எச்.ஏ.எல். பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். 3 அறைகளை முன்பதிவு செய்த அவர்கள், அதிக சத்தத்துடன் பாடி நடனமாடியதால் அருகிலிருந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வாலிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. “பணம் கொடுக்கவில்லை என்றால் கைது செய்வோம்” என அச்சுறுத்தியதால் அவர்கள் ஆன்லைனில் பணம் செலுத்துவதாகத் தெரிவித்தனர். போலீசார் ரொக்கமாகக் கேட்டதால், ஒரு வாலிபர் ஏ.டி.எம்.க்குச் சென்றார்.
இதற்கிடையே போலீசார் மிரட்டியதால் பயந்துபோன இளம்பெண் ஓட்டல் அறை பால்கனியில் இருந்து கீழே குதித்தார். ஓட்டல் சுற்றுச்சுவரில் இருந்த இரும்புக் கம்பியில் சிக்கி தலை, கை, கால்களில் படுகாயம் அடைந்தார். ரத்தவெள்ளத்தில் துடித்த அவரை நண்பர்கள் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்றது.
இந்த சம்பவம் குறித்து, இளம்பெண்ணின் தந்தை போலீஸில் புகார் அளித்தார். பின்னர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சம்பவ இடத்தை ஆய்வு செய்த போலீசார், அத்துடன் பணம் பறிக்க முயன்ற போலீசார் பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
