சமூக வலைதளத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதிவை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்திருப்பதற்கான கேள்விக்கு, “நீதியை நிலைநாட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்” என தவெக தலைவர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற தேசிய சப் ஜூனியர் கூடைப்பந்து போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க அவர் விமான நிலையம் வந்திருந்தார். அப்போது ஏஎன்ஐ செய்தியாளர் இரண்டு கேள்விகளை எழுப்பினார்.
அதில், ‘சமூக வலைதளத்தில் வெளியிட்ட உங்கள் சர்ச்சைக்குரிய பதிவை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?’ என நிருபர் கேட்டார். அதற்கு ஆதவ் அர்ஜுனா, ‘நாங்கள் நீதியை நிலைநாட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்’ என்று கூறினார்.
மேலும், ‘தவெக மீண்டும் பிரச்சாரம் தொடங்குமா?’ என்ற கேள்விக்கு அவர், ‘உண்மையும் நீதியும் விரைவில் வெளிப்படும்’ என சுருக்கமாக பதிலளித்துவிட்டு விரைவாகச் சென்றார்.
தற்போது ஆதவ் அர்ஜுனா டெல்லியில் முகாமிட்டுள்ளார். கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தை அணுகத் திட்டமிட்டுள்ளார். இதற்காக முன்னணி வழக்கறிஞர்களுடன் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆதவ் அர்ஜுனாவின் இந்தக் கருத்துக்கள், சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தவெக அடுத்தகட்ட நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்ற ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.