விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்த பிரபாகரன் (35) என்பவர் மது போதைக்கு அடிமையானதால் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் சுற்றியுள்ளார். இதனால் இவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட வரலட்சுமி (25) தனது மகள் ஆதன்யாவை அழைத்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.
இரவில் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை பிரபாகரன் சமாதானம் செய்துள்ளார். நாளை காலை வந்து அழைத்து செல்லுமாறு மனைவி வரலட்சுமி தெரிவித்தார். இதனை அடுத்து மது போதையில் வீட்டுக்கு சென்ற பிரபாகரன், வீட்டின் சாவி தொலைந்ததால் மாடியில் இருந்த புகை குண்டின் வழியாக வீட்டுக்குள் செல்ல முயன்றுள்ளார். புகை கூண்டின் மேல்புறம் அகலமாகவும் உள்புறம் குறுகலாகவும் இருந்ததால் பாதியில் மாட்டிக் கொண்ட பிரபாகரன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
காலையில் கணவர் வரவில்லை என்பதை அறிந்த மனைவி வீட்டுக்கு சென்று உள்ளார். தண்ணீர் வாளிக்குள் கிடந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து பார்த்தபோது புகைக்கூண்டில் இறந்த நிலையில் கணவர் தொங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் வந்து புகை கூண்டை உடைத்து பிரபாகரன் உடலை மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வரலட்சுமியிடம் புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மது போதையில் புகை கூண்டுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மம்சாபுரம் பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.