பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்த முக்கிய மூன்று நாடுகள்! வெளியான அதிரடி அறிவிப்பு!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. காசாவில் அமைதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும், இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கவும் ஆஸ்திரேலியா இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ், பாலஸ்தீனத்தை சுதந்திரமான ஒரு நாட்டாக அங்கீகரிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பில், ‘மத்திய கிழக்கு பகுதியில் அமைதி நிலைநிறுத்த, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் தனித்தனி நாடுகளாக இருக்க வேண்டும். இது 1947ஆம் ஆண்டிலிருந்து கனடா கடைப்பிடித்து வரும் கொள்கை’ எனவும், அதனை முன்னிட்டு பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளும் இதே நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, பாலஸ்தீன மக்களுக்கான தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் கடுமையான எதிர்ப்பை மீறியும், கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதில், ஜி7 கூட்டமைப்பில் இருந்து பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த முதல் நாடு கனடா என்பதும் சர்வதேச அளவில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும், ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திற்கு முன்னதாக தொடங்கவிருக்கும் உச்சிமாநாட்டில், பாலஸ்தீனத்திற்கு தேசிய அங்கீகாரம் வழங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என பிரான்ஸ் தெரிவித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த முன்னேற்றம், மத்திய கிழக்கில் நீண்ட காலமாக நீடித்து வரும் மோதலுக்கு ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இது கூறப்படுகிறது.

Related News

Latest News