ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த சுபாஷ் குமார் ராவத் என்பவர் தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, அவரது வீட்டின் எக்ஸாஸ்ட் வழியாக ஒருவர் சிக்கி கொண்டிருப்பதை பார்த்து இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனை பார்த்து பயந்த ராவத் உடனடியாக சத்தம் போட்டுக் கொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், எக்ஸாஸ்ட்டில் சிக்கியிருந்த அந்த நபரை மீட்டு கைது செய்தனர். விசாரணையில், தன்னுடன் வந்த கூட்டாளிகள் தன்னை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியதாக அந்த திருடன் போலீசாரிடம் தெரிவித்தான்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்வையாளர்களிடையே சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘கலகலப்பு’ திரைப்படத்தின் காட்சியை இது நினைவுபடுத்துவதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
