Friday, April 25, 2025

வானம் உங்களை பார்த்து புன்னகைக்க போகிறது! நாளை அரிய வானியல் நிகழ்வு! வெறும் கண்களால் பார்த்து ரசிக்கலாம்!

நாளை அதிகாலை நீங்கள் வானத்தைப் பார்த்தால், அது உங்களைப் பார்த்து புன்னைகை செய்வதை பார்க்கலாம். உண்மைதான்.. ஏப்ரல் 25ம் தேதி அதாவது நாளை வெள்ளி மற்றும் சனி கோள்கள் அருகருகே சங்கமிக்க இருக்கின்றன. அதன் கீழ் அன்று வர உள்ள தேய்பிறை நிலவு, பார்ப்பதற்கு சிரிக்கும் எமோஜி போல காட்சியளிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு கோள்களும் பளிச்சென காட்சியளிக்கும் என்பதால் சாதாரண கண்களாலேயே பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாளை அதிகாலை டிரிபிள் கன்ஜங்க்ஷன் எனப்படும் அரிய வானியல் காட்சி நிகழப்போகிறது. காலையில், வெள்ளி, சனி மற்றும் பிறை சந்திரன் ஆகியவை விடியலுக்கு முன்பு அருகருகே தோன்றும். இது சிரிக்கும் முகத்தை நினைவூட்டும் ஸ்மைலி வடிவம் போல இருக்கும். சூரிய உதயத்திற்கு சற்று முன்பு இந்த காட்சியை நீங்கள் காணலாம் என்று நாசா அறிவித்திருப்பது மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

துல்லியமான பார்வை உள்ளவர்களுக்கு அடிவானத்தில் பிரகாசமான ஸ்மைலி உருவம் தெரியும். பெரிய கிரகங்களைப் போலல்லாமல் குறைவாகத் தோன்றுவதால் எல்லா இடங்களிலும் தென்படும் வாய்ப்பு குறைவு என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

வானில் இரவு வானத்தில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட கோள்கள் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாகத் தோன்றும்போது ஒரு கட்டமைப்பு உருவாகிறது. தற்போது நிகழவிருக்கும் டிரிபிள் கன்ஜங்க்ஷன்-னில் மெல்லிய பிறை நிலா சிரிப்பது போல புன்னகை முகமாகத் தோன்றும். இந்த அரிய வானியல் நிகழ்வை தவற விடவேண்டாம். இது அதிகாலை 5:30 மணியளவில் இதனை காணலாம் என்று வானியலாளர்கள் கூறுகின்றனர்.

Latest news