இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பெயர் போன பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா ஒரு அதிபயங்கர ஆயுதத்தை வழங்கப் போகிறது. அது என்ன ஆயுதம்? அதனால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? வாங்க பார்க்கலாம்.
அமெரிக்காவின் போர்த் துறை சமீபத்தில் வெளியிட்ட ஒரு ஆயுத ஒப்பந்தப் பட்டியலில், பாகிஸ்தானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா தனது AIM-120 AMRAAM என்ற அதிநவீன ஏவுகணைகளைப் பாகிஸ்தானுக்கு வழங்கக்கூடும்.
சரி, அப்படி என்ன ஸ்பெஷல் இந்த AMRAAM ஏவுகணையில்?
இது வானிலிருந்து வானில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஒரு சூப்பர்சோனிக் ஏவுகணை. அதாவது, ஒலியை விட 4 மடங்கு வேகத்தில் பாய்ந்து சென்று, 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எதிரி விமானங்களையும் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இதன் மிகப்பெரிய பலம், இது ‘ஃபயர் அண்ட் ஃபர்கெட்’ (Fire and Forget) ரகத்தைச் சேர்ந்தது. அதாவது, ஏவப்பட்ட பிறகு, விமானியின் உதவி இல்லாமலேயே, தானாகவே இலக்கைத் தேடிச் சென்று தாக்கி அழிக்கும்.
நினைவிருக்கிறதா? 2019-ஆம் ஆண்டு, நம் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் அவர்களின் விமானத்தை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்தியதும் இதே வகையைச் சேர்ந்த ஏவுகணைதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் தனது F-16 ரக போர் விமானங்களில் இந்த ஏவுகணைகளைப் பொருத்தி வைத்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஏற்கனவே பொருளாதாரத்தில் தள்ளாடி, IMF-இடம் கையேந்தும் பாகிஸ்தானுக்கு 41.6 பில்லியன் டாலர்கள் வரை செலவாகலாம் என்று கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, மறுபக்கம் அமெரிக்காவின் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வருகிறது. ஒருபுறம், தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடுவதாக உலக நாடுகளுக்கு உபதேசம் செய்யும் அமெரிக்கா, மறுபுறம் பாகிஸ்தானுக்கு இப்படிப்பட்ட அதிநவீன ஆயுதங்களை வழங்குவது ஏன் என்ற கேள்வி உலகம் முழுவதும் எழுந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, பிரிட்டன், ஜப்பான், சவுதி அரேபியா, இஸ்ரேல், தைவான் என 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் இந்த ஏவுகணைகள் விற்கப்பட உள்ளன. இந்த ஒப்பந்தம் 2030-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில்தான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான் காரணம் என்று பாகிஸ்தான் புகழ்ந்து தள்ளிய நிலையில், இப்போது இந்த ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தாவது, தெற்காசியாவின் அமைதிக்கு பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஆயுத ஒப்பந்தம், தெற்காசியாவின் அதிகார சமநிலையை மாற்றுமா? இந்தியா இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.