மாரடைப்பு என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படக்கூடியது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், வாரத்தின் மற்ற நாட்களை விட திங்கள்கிழமைகளில் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதய நோய் பாதிப்பு உள்ளவர்களில் சுமார் 85 சதவீதம் பேர் மாரடைப்பால் உயிரிழப்பதாக தரவுகள் கூறுகின்றன. உலகளவில் நிகழும் மொத்த மரணங்களில் சுமார் 32 சதவீதம் மாரடைப்பே காரணமாக உள்ளது. வாரத்தின் ஏழு நாட்களிலும் மாரடைப்பு ஏற்படலாம் என்றாலும், வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமைகளில் தான் மிக மோசமான மாரடைப்புகள் அதிகம் பதிவாகின்றன. அதனால், திங்கள்கிழமைகளில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
திங்கள்கிழமை ஏன் அதிக ஆபத்தான நாள்? இதற்குப் பின்னால் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் விளக்குகின்றனர்.
மனித உடலில் இயங்கும் உயிரியல் கடிகாரம் திங்கள்கிழமைகளில் மாறுபடலாம். இந்த மாற்றம் ஹார்மோன் சுரப்புகளை பாதித்து, அதன் மூலம் மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
வார இறுதி விடுமுறையை நிம்மதியாகக் கழித்த பிறகு, மீண்டும் வேலை அழுத்தம் நிறைந்த சூழலுக்கு திரும்பும்போது ஏற்படும் மன அழுத்தம், மாரடைப்புக்கான அபாயத்தை அதிகரிக்கலாம்.
சிலர் வார இறுதிகளில் அதிகமாக மது அருந்துதல், விருந்து மற்றும் கனமான உணவுகளை எடுத்துக்கொள்வார்கள். இதனால் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, அடுத்த நாளில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உருவாகலாம்.
வார இறுதிகளில் இனிப்புகள், அதிக உப்பு கொண்ட சிப்ஸ், பதப்படுத்தப்பட்ட மாமிச உணவுகள் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடுவது, குறிப்பாக இதய நோய் இருப்பது தெரியாமல் இருப்பவர்களுக்கு ஆபத்தாக மாறலாம். இதன் தாக்கம் திங்கள்கிழமையில் வெளிப்படலாம்.
திங்கள்கிழமைகளில் பொதுவாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். வார இறுதியில் தாமதமாக உறங்கிவிட்டு, திங்கள்கிழமை அவசரமாக எழுந்து அலுவலகத்திற்கு ஓடுவது, போக்குவரத்து நெரிசல் காரணமான மன அழுத்தம் ஆகியவை கூட மாரடைப்பைத் தூண்டக்கூடும்.
இந்த காரணங்களால் தான் திங்கள்கிழமை மாரடைப்புக்கு அதிக ஆபத்தான நாளாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இதற்கான துல்லியமான அறிவியல் காரணம் இதுவரை உறுதியாக நிரூபிக்கப்படவில்லை.
