கிரிப்டோ கரன்சி சந்தை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், சர்வதேச அளவில் தங்கத்தின் விலை மீண்டும் உயரும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மிக வேகமாக வளர்ந்த கிரிப்டோ சந்தை, தற்போது அதைவிட வேகமாக சரிவை சந்தித்து வருகிறது. மிகவும் மதிப்பு மிக்க கிரிப்டோ நாணயமான Bitcoin இந்த ஆண்டில் வரலாற்று உச்சத்தை எட்டியது. ஒரு பிட்காயின் மதிப்பு இந்திய ரூபாயில் 1 கோடியை கடந்தது. ஆனால் இப்போது அதன் விலை சுமார் 77 லட்சம் ரூபாய்க்கு குறைந்துள்ளது.
கடந்த ஆறு வாரங்களில் கிரிப்டோ சந்தையிலிருந்து மிகப்பெரிய அளவில் பணம் வெளியேறியுள்ளது. Bitcoin , Ethereum உள்ளிட்ட முன்னணி கிரிப்டோ நாணயங்களின் விலையும் தொடர்ந்து தளர்ந்து கொண்டே இருக்கிறது. 2025ஆம் ஆண்டில் பிட்காயினில் நல்ல லாபம் பார்த்த முதலீட்டாளர்களே தற்போது நஷ்டத்தில் சிக்கியுள்ளனர் என்றே கூறலாம்.
இந்த சூழ்நிலையில், கிரிப்டோ சந்தை வீழ்ச்சி தங்கத்தின் விலையை மேலும் தூண்டுமா என்ற சந்தேகம் எழுகிறது. ஏற்கனவே 2025ஆம் ஆண்டிலேயே தங்கம் தன் வரலாற்று உச்சத்திற்கு அருகில் சென்று விட்டது. கிரிப்டோவில் இருந்து பணத்தை வெளியே எடுக்கும் முதலீட்டாளர்கள் நேரடியாக தங்க சந்தைக்கு மாறினால், தங்கத்திற்கு புதிய தேவை உருவாகி விலை மேலும் உயரலாம். ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
