Thursday, May 29, 2025

Collector பதவியை உருவாக்கிய ஆங்கிலேயரை கொண்டாடும் தமிழக மக்கள்! காரணம் என்ன?

சென்னை மெரினா கடற்கரை தீவுத்திடலைக் கடந்து செல்லும் போது வங்கக் கடலைப் பார்த்தபடி கம்பீரமாக குதிரையில் அமர்ந்திருக்கும் சர் தாமஸ் மன்றோ.. சென்னை மாகாணத்தில் பரபரப்பான முக்கிய சாலைப் பகுதியில் கம்பீரமாக நிற்கும் குதிரையில் அமர்ந்திருப்பார் சர் தாமஸ் மன்றோ.

யார் இந்த சர் தாமஸ் மன்றோ? எதற்காக இவருக்கு சிலை? இந்தியா சுதந்திரமடைந்து 78 ஆண்டுகளுக்குப் பிறகும் தாமஸ் மன்றோவை பற்றிப் பேச அப்படி என்ன இருக்கிறது? என்பதை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..

சர் தாமஸ் மன்றோ 27.05.1761 இல் ஸ்காட்லாந்து நாட்டில் கிளாஸ்கோ நகரில் பிறந்தவர்.. இவருக்கு சிறு வயதிலேயே அம்மை நோய் தாக்கியதன் விளைவாக செவித்திறன் பறிபோனது.. சிறு வயது முதலே ராணுவத்தில் சேர்வதைக் கனவாகக் கொண்டிருந்த மன்றோ, வறுமை, அப்பாவின் எதிர்ப்பு என அனைத்து தடைகளையும் கடந்து 1779ஆம் ஆண்டு தனது 18வது வயதில், ‘கேடட்’ டாக அதாவது சிப்பாயாக பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்தார். 1780 ஆண்டு ஜனவரி 15ஆம் நாள் மன்றோ  மெட்ராசுக்கு கப்பலில் வழியாக வந்திறங்கினார்

இந்தியாவை அடிமைப்படுத்தி இருந்த பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் சார்பில் 1780 அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் காலாட் படைப்பிரிவின் அலுவலராக பணியாற்றி வந்தார்…தன் திறமையின் காரணமாக பல்வேறு நிலைகளில் 40 ஆண்டுகள் கலெக்டராக பின் மெட்ராஸ் மாகாணத்தின் கவர்னராக  பணியாற்றினார்..அப்போது ஆற்றிய பணிகள், குறிப்பாக நிலவரி, நீதித்துறை மற்றும் கல்வித் துறைகளில் ஏற்படுத்திய மாற்றங்கள், இன்றும் இந்திய நிர்வாகத்தில் ஒரு முக்கியப் பங்களிப்பாகக் கருதப்படுகின்றன.

தாமஸ் மன்றோ பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு மிக முக்கியமான நிர்வாகி மற்றும் சீர்திருத்தவாதியாக அழைக்கப்படுகிறார்.

தாமஸ் மன்றோவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் குறிப்பிடத்தக்கச் சீர்திருத்தம் ரயத்துவாரி நிலவரி முறை ஆகும். இது அவர் “ரயத்துவாரி முறையின் தந்தை” என்று அழைக்கப்பட ஒரு முக்கியக் காரணம்.

இந்த முறையில்,அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக வரிகளை வசூலித்தது. “ரயத்” என்பது விவசாயி என்று பொருள், இந்த முறையின் கீழ், விவசாயிகளுக்கு நிலத்தின் உரிமை வழங்கப்பட்டது.  இடைத்தரகர்களான ஜமீன்தார்கள் அல்லது நிலப்பிரபுக்களின் பங்கு இதில் நீக்கப்பட்டது.

மன்றோ, இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், ஆட்சியர் என்ற நிர்வாகப் பதவியை உருவாக்கியவர்.. இந்த ஆட்சியர் பதவி இன்றும் இந்தியாவின் மாவட்ட நிர்வாகத்தின் மையமாக உள்ளது. ஆட்சியர்கள் நிலவரி வசூல், சட்டம் ஒழுங்கு,பராமரிப்பு, சிவில் வழக்குகளைத் தீர்ப்பது போன்ற பல பொறுப்புகளைக் கொண்டிருந்தனர்.இவர் மற்ற பிரிட்டிஷ் அதிகாரிகளைப்  போல் இல்லாமல், இந்திய மக்களுடன் நெருக்கமாகப் பழகினார்.நேரடியாகக் கிராமங்களுக்குச் சென்று மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டார்.மன்றோ தனது பயணத்திற்காக குதிரையையே பயன்படுத்தி வந்ததாகக் கூறுகிறார் எழுத்தாளர் அமுதன்.அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளைக் கற்றுக்கொண்டார்..

மன்றோ, 1826 இல், தாமஸ் மன்றோவின் பரிந்துரையின் பேரில், பொதுக் கல்விக்கான ஒரு குழு அமைக்கப்பட்டது. இது பிற்காலத்தில் பிரசிடென்சி கல்லூரி (Presidency College) போன்ற கல்வி நிறுவனங்கள் உருவாவதற்கு வழிவகுத்தது.இவர் ஆசிரியர் பயிற்சிக்கான மெட்ராஸ் பாடநூல் கழகத்தை (Madras School Book Society) உருவாக்கினார். இது ஆசிரியர் பயிற்சிப் பள்ளியாக வளர்ந்து, பின்னாளில் மாநிலக் கல்லூரியாக உயர்ந்தது.அது மட்டுமின்றி, பெண் கல்வியை உறுதி செய்வதிலும் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

சர் தாமஸ் மன்றோ இன்னும் எண்ணற்ற அளவில் நமது நாட்டிற்காக பல நன்மைகளை செய்துள்ளார்..

தாமஸ் மன்றோவுக்கு 65 வயதான நிலையில் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என பிரிட்டிஷ் நிர்வாகத்திடம் கோரிக்கை நிலையில், ஆனால் மன்றோவின் கோரிக்கையை பிரிட்டிஷ் நிர்வாகம் தள்ளிப் போட்டுக்கொண்டே போனது.

இதனால் மன்றோ, மன மாற்றத்துக்காக பயணம் ஒன்றை மேற்கொள்ள விரும்பினார்.பணிக் காலத்தில், தனக்கு மிகவும் பிடித்த ஆந்திராவின் கடப்பா பகுதிக்கு ஜூலை 1827இல் பயணப்பட்டபோது , அங்கு காலரா நோய் பரவிக் கொண்டிருப்பதால், செல்ல வேண்டாம் என மன்றோவுக்கு ஆலோசனை கூறப்பட்டது.

“ஒரு கொடிய நோயால் மக்கள் தவிக்கும்போது ஓர் அதிகாரி தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது அழகல்ல” என்று சொன்ன மன்றோ, கடப்பாவுக்கு பயணித்தார். கிராமம் கிராமமாகப் போய் மக்களுக்கு ஆறுதல் கூறினார். மருத்துவர்களை உற்சாகப்படுத்தி சிகிச்சையை விரைவுபடுத்தினார்.

கடப்பாவின் புத்தேகொண்டா என்ற பகுதியில் மன்றோ முகாமிட்டிருந்தபோது மன்றோவையும் காலரா தாக்கியது. சிகிச்சைப் பலனின்றி சர் தாமஸ் மன்றோவின் உயிர், 1827 ஜூலை 6ஆம் தேதி பிரிந்தது. அவரின் உடல், கடப்பாவில் உள்ள கூட்டி என்ற பகுதியின் ஆங்கிலேயர்களின் கல்லறை பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டது..

இந்த தகவல்களை அறிந்து மக்கள் அவருக்காக சென்னையில் பிரமாண்டமான இரங்கல் கூட்டம் நடந்தது. அந்த இரங்கல் கூட்டத்தில் தாமஸ் மன்றோவுக்கு மெட்ராஸில் சிலை வைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. பொதுமக்கள் பங்களிப்புடன் அன்றைய மதிப்பில் சுமார் 8 ஆயிரம் பிரிட்டிஷ் பவுண்டுகள் வசூலாகின.

அதன் பிறகு,அந்தச் சிலை 1839 அக்டோபர் 23 அன்று திறக்கப்பட்டது. அன்று மெட்ராஸ் மாகாணத்துக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அடிமை சின்னமாக இருக்கும் பிரிட்டிஷாரின் சிலைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுக்க எழுந்த நிலையில், சென்னையில் இருந்த பல பிரிட்டிஷாரின் சிலைகள் அகற்றப்பட்டு அருங்காட்சியகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.

கடந்த 1957இல் சிப்பாய்க் கலக நூற்றாண்டின்போது, மன்றோ சிலை இருக்கும் இடத்துக்கு சில அடிகள் தள்ளியிருந்த வெலிங்டன் பிரபுவின் சிலைகூட அகற்றப்பட்டது. ஆனால், மன்றோ சிலை அகற்றப்படவில்லை. இன்றளவும் குதிரையில் சிலையாக கம்பிரமாக நிற்கிறார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news