Monday, December 22, 2025

‘துரோகத்திற்கான நோபல் பரிசை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கலாம்’ : செங்கோட்டையன் பேட்டி

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க முயன்றதால், மூத்த தலைவர் செங்கோட்டையன் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார். ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை சந்தித்ததால், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, எடப்பாடி பழனிசாமி வரும் முன்பே 1972 முதல் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி இருக்கிறேன் என்றும், 53 ஆண்டு காலம் பணியாற்றிய தனக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கலாம் எனவும் கூறினார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை வழிநடத்த சசிகலா தன்னை கேட்டுக்கொண்டபோது, தான் எடப்பாடி பழனிசாமியின் பெயரை பரிந்துரைத்ததாக கூறினார். அதிமுக பிளவுபடகூடாதென்று 2 முறை தனக்கு கிடைத்த முக்கிய வாய்ப்பை விட்டுக்கொடுத்தேன் என்று செங்கோட்டையன் கூறினார்.

தொடர் தோல்வியால்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அனைவரையும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், 2026-ல் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தான் கூறியதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

2026-ல் அதிமுக தோல்வி அடைந்தால் கேள்வி கேட்பார்கள் என்பதால் தான் பேட்டி அளித்ததாக அவர் தெரிவித்தார்.அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு தான் மிகவும் வருத்தப்படுவதாகவும், இரவு முழுவதும் தூங்காமல் மனவேதனை அடைந்துள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார்.

தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், திமுகவின் B Team-ல் தான் இல்லை என்று எடப்பாடி பழனிசாமிதான் கொடநாடு வழக்கில் ஏ1 குற்றவாளி என்று செங்கோட்டையன் கூறியுள்ளர். ஜெயலலிதாவின் பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஏன் குரல் கெழடக்க வில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால்தான் தொண்டர்கள் சோர்ந்துபோய் உள்ளனர் என்றும், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்ததில் இருந்து தொடர் தோல்வியை சந்தித்து வருவதாகவும் அவர் கூறினார்.

சசிகலாவிடம் இருந்து எடப்பாடி பழனிசாமி எப்படி பதவியை பெற்றார் என்பதையும் நாடே அறியும் என்றும் எம்.ஜி.ஆர் கொண்டு வந்த விதியை மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

துரோக்கத்திற்கான நோபல் பரிசை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கலாம் என்று குறிப்பிட்ட செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து தான் நீக்கப்பட்டது குறித்து சட்ட ரீதியாக தான் நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Related News

Latest News