விண்வெளி என்பது இதுவரை மனிதர்களின் அறிவியல் ஆர்வத்திற்கும், நட்சத்திரங்களை ஆராய்வதற்கும் மட்டுமே பயன்படும் இடமாக இருந்தது. ஆனால், இனி வரும் காலங்களில் இது உலகின் மிக முக்கியமான போர்க்களமாக மாறப்போகிறது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. ஆம், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் விண்வெளியை ஒரு ராணுவத் தளமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டன. இதற்காக இரு நாடுகளும் தங்களது தொழில்நுட்பங்களை ரகசியமாக மேம்படுத்தி வருகின்றன.
சீனா ஒரு மிகத் தெளிவான தத்துவத்தை வகுத்திருக்கிறது. அதாவது, “விண்வெளியைக் கட்டுப்படுத்தினால், பூமியில் நடக்கும் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும்.” நவீன உலகத்தின் ராணுவம், தகவல் தொடர்பு, ஜி.பி.எஸ் (GPS) வழிசெலுத்தல் மற்றும் வங்கிப் பரிவர்த்தனை என அனைத்திற்குமே செயற்கைக்கோள்கள் தான் ஒரு ‘நரம்பு மண்டலமாக’ செயல்படுகின்றன. ஒருவேளை இந்தச் செயற்கைக்கோள்கள் செயலிழந்துவிட்டால், அந்த நாடே முடங்கிவிடும் என்பதைச் சீனா நன்கு உணர்ந்திருக்கிறது.
இதற்காகச் சீனா தற்போது கையில் எடுத்திருக்கும் ஆயுதங்கள் மிகவும் ஆபத்தானவை. போரில் உடனடியாகச் செயற்கைக்கோள்களை வெடிகுண்டு வைத்து அழிப்பதற்குப் பதிலாக, அவற்றைச் செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பங்களில் சீனா கவனம் செலுத்துகிறது. உதாரணமாக, ரோபோட்டிக் கைகளைக் கொண்ட செயற்கைக்கோள்கள் மூலம், எதிரி நாட்டுச் செயற்கைக்கோள்களைப் பிடித்து இழுத்து, விண்வெளியின் ஒரு மூலையான ‘கிரேவ்யார்டு ஆர்பிட்'(graveyard orbit) எனப்படும் குப்பைத் தொட்டிக்குத் தள்ளுவது அல்லது அவற்றின் சிக்னல்களை ஹேக் செய்வது போன்ற நுணுக்கமான வேலைகளில் சீனா ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பான சில சோதனைகளையும் ஏற்கனவே சீனா வெற்றிகரமாக முடித்துவிட்டது.
இன்னொரு பக்கம், அமெரிக்காவும் இந்த விண்வெளிப் போட்டியில் சும்மா இருக்கவில்லை. விண்வெளிப் பாதுகாப்பிற்காகவே தனிப்படையான ‘ஸ்பேஸ் ஃபோர்ஸ்’ பிரிவை அமெரிக்கா உருவாக்கி, விண்வெளியைத் தனது ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. விண்வெளியில் நடக்கும் இந்தச் சிறிய நகர்வுகள் கூட, வரும் காலங்களில் பூமியில் பெரும் மாற்றங்களை அல்லது மோதல்களை உருவாக்க வாய்ப்பிருப்பதாக ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
இனி வரும் போர்கள் எல்லைகளில் மட்டும் நடக்காது, பூமியைச் சுற்றி ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் உயரத்தில் விண்வெளியிலும் நடக்கும் என்பதுதான் தற்போதைய நிதர்சனம். விண்வெளி அமைதிப் பூங்காவாக இருக்குமா? அல்லது அடுத்த பெரும் மோதலுக்கான தொடக்கப் புள்ளியாக மாறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
