இந்த ஆண்டு புதிய வருமானவரி மசோதா – 2025 பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, புதிய வருமானவரி சட்டம் – 2025, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 64 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பழைய வருமானவரி சட்டத்திற்கு மாற்றாக இந்த புதிய சட்டம் அமல்படுத்தப்படுகிறது.
இந்த சட்டத்தின் முக்கிய அம்சமாக, வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமானவரி விதிக்கப்படாது. இதனால், வருமானம் ஈட்டும் தனிநபர்களின் கைகளில் அதிக பணம் இருக்கும் என்றும், அவர்கள் அதிக அளவில் பொருட்களை வாங்குவதன் மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும் என்றும் மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
புதிய வருமானவரி சட்டத்தின் ஒரு பகுதியாக, ஜி.எஸ்.டி. வரி அடுக்குகள் 4-இல் இருந்து 2-ஆக குறைக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றம் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் 375 பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக, சுங்க வரிகளை மேலும் எளிமைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
