Friday, December 27, 2024

விபத்தில் பேச்சை இழந்தவருக்குத் தடுப்பூசி ஏற்படுத்திய அதிசயம்

விபத்தில் பேசும் திறனை இழந்த ஒருவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டபின் மீண்டும் பேசும் திறனைப் பெற்றுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம், பொகாரோ மாவட்டம், சல்காதி கிராமத்தைச் சேர்ந்தவர் துலர்சந்த் முண்டா. 55 வயதாகும் இவர், நான்காண்டுகளுக்குமுன் ஏற்பட்ட விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டு முடங்கிப் போனார். பேசும் திறனை இழந்த அவரது கால்களும் முடங்கிப்போய், நடக்கமுடியாமல் படுத்த படுக்கையாகவே இருந்துள்ளார்.

அதிலிருந்து மீண்டுவர 4 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக செலவுசெய்து சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால், சிகிச்சை பலன் தரவில்லை. இதனால் மனம் உடைந்து போனார் துலர் சந்த் முண்டா.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 4 ஆம் தேதி கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டார். கொரோனா தடுப்பூசி அவரை மீண்டும் எழுந்து நடக்கச் செய்துவிட்டது. அத்துடன் துலர்சந்த் முன்புபோல் நன்றாகப் பேசத் தொடங்கிவிட்டார்.

அதைக்கண்டு அவரது குடும்பத்தினர் ஆச்சரியமும் அளவிலா மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். துலர்சந்தும் உற்சாகமாகியுள்ளார்.

அதேசமயம், விபத்து ஏற்பட்டு 5 ஆண்டுகளுக்குப்பிறகு, தடுப்பூசியால் துலர்சந்த இயல்பு நிலைக்குத் திரும்பியது சுகாதாரத்துறை அதிகாரிகளையும் மருத்துவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்னும் சிலர் தயங்கி வரும் வேளையில், தடுப்பூசியால் நிகழ்ந்துள்ள இந்த மருத்துவ அதிசயம், தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தயங்குவோருக்கு நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது.

Latest news