Tuesday, January 13, 2026

விஜய் பயணித்த சொகுசு விமானம்., ஒரு மணி நேரத்திற்கு இத்தனை லட்சம் வாடகையா?

தவெக தலைவர் விஜய், கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் அவர் நடத்திய பிரசாரத்தின் போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சம்பவ இடத்திலும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, நடிகர் விஜய்யிடமும் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி, நடிகர் விஜய் நேற்று காலை தனியார் சொகுசு விமானத்தில் டெல்லி சென்று, சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை முடிந்த பிறகு, இன்று மதியம் அவர் சென்னை திரும்பினார்.

நடிகர் விஜய் பயணம் செய்த இந்த சொகுசு விமானம் “ப்ளை எஸ்பிஎஸ்” (Fly SPS) என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது. இது எம்ப்ரேர் லெகசி 600 (Embraer Legacy 600) ரகத்தைச் சேர்ந்த விமானமாகும். இந்த விமானத்தில் சுமார் 13 பேர் வரை பயணம் செய்ய முடியும்.

இந்த விமானம் நீண்ட தூரம் இடைநிறுத்தமின்றி பயணிக்கக்கூடிய திறன் கொண்டதாகும். ஒரே முறையில் சுமார் 5,500 கிலோமீட்டர் வரை தரையிறங்காமல் பறக்க முடியும். மேலும், 41,000 அடி உயரத்தில் பறக்கும் திறன் இதற்கு உள்ளது. விமானத்தின் உள்ளே சாதாரண இருக்கைகள் அல்லாமல், சோபா வடிவில் அமர்வதற்கான வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சொகுசு விமானத்தின் ஒரு மணி நேர வாடகை ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கு மேலாக, விமானம் தரையிறங்கும் விமான நிலைய கட்டணத்தையும் பயணிப்பவரே செலுத்த வேண்டும். அந்த வகையில், நடிகர் விஜய்யின் டெல்லி பயணத்திற்காக விமான வாடகைக்கே மட்டும் சுமார் ரூ.50 லட்சம் செலவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News

Latest News