யானைக் குட்டி ஒன்று கிண்ணிக் கோழிகளை விரட்டிவிரட்டி விளையாடி
வரும்போது தடுமாறி கீழே விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, போலோ போன்ற விளையாட்டுகள்
விளையாடுவதைப் பார்த்திருக்கிறோம். அதுபோல, கிண்ணிக் கோழிகளை
விரட்டிவிரட்டி விளையாடுகிறது ஆப்பிரிக்க யானைக் குட்டி ஒன்று.
பசுமையான மலைப் பகுதியில் கிண்ணிக் கோழிகள் கூட்டமாக நின்று
இரை தேடிக்கொண்டிருக்கின்றன. அங்கே மரத்தடிகள் அருகே தன் தாய்
நின்றிருக்க, கிண்ணிக்கோழிகளை விரட்டி விளையாடத் தொடங்குகிறது
யானைக் குட்டி.
விரட்டத் தொடங்கியதும் கிண்ணிக்கோழிகள் கலைந்து செல்கின்றன.
அவற்றை வட்டவடிவில் சுற்றிவந்து விரட்டத் தொடங்கிய குட்டியானை
இடப்புறமாகக் கால் இடறி கீழே விழுகிறது. உடனே எழுந்து தன் தாய் யானை
அருகே சென்று நின்றுகொள்கிறது. குட்டி யானையின் இந்தச் செயல்
குழந்தைகளின் செய்கைகளை ஒத்துள்ளது.
யானை தன்னைவிட சிறிய பறவையான கிண்ணிக் கோழிகளை
விரட்டிவிரட்டி விளையாடுகிறது. குழந்தைத்தனமான குட்டி யானையின்
இந்த விளையாட்டுக் காண்போரைக் கவலைகளை மெய்ம்மறந்து
ரசிக்கச்செய்கிறது. கிண்ணிக் கோழிகளும் யானைக் குட்டியை மறுக்காட்டி மறுக்காட்டி
வருவதும் பார்ப்போரை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்கிறது.
பார்க்கப் பார்க்க சலிக்காத விலங்கு யானை. சிறுவர் முதல் பெரியவர் வரை
அனைவருக்கும் பிடித்தது யானை. பார்த்தாலும் அழகு, விளையாடினாலும் அழகு,
இடறி விழுந்தாலும் அழகு.
யானை யானைதான்.