தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக அங்கு உள்ள போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த சமயத்தில் அவர்கள் இருவரும் இறந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைதான 9 காவலர்களும் குற்றவாளிகள் என கடந்த 23-ந்தேதி நீதிபதி தீர்ப்பளித்த நிலையில், இன்று 9 காவலர்களுக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி முத்துகுமரன் தீர்ப்பளித்துள்ளார்.
வழக்கு கடந்து வந்த பாதை
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி கொரோனா தொற்று பரவலால் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இரவு 7.30 மணியளவில், கொரொனா விதிமுறைகளை மீறி செல்போன் கடை திறக்கப்பட்டதாக காவல்துறையினர் விசாரணை.
ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கினர்.
2020 ஜூன் 19 ஆம் தேதி இரவு ஜெயராஜ், பென்னிக்ஸ் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
2020 ஜூன் 20ஆம் தேதி பலத்த காயங்களுடன் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
2020 ஜூன் 22ஆம் தேதி, இரவு 9.மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகன் பென்னிக்ஸ் உயிரிழப்பு.
ஜூன் 23ஆம் தேதி சிகிச்சை பலனின்றி, அதிகாலை 5.40 மணிக்கு தந்தை ஜெயராஜும் உயிரிழப்பு.
போலீசார் தாக்கியதில் அடுத்தடுத்து தந்தை-மகன் உயிரிழப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது
போலீசாரின் இந்த கொடூர செயலால் அப்பாவிகள் இருவரின் உயிர்போனது குறித்து, 2020 ஜூன் 23ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணை
தந்தை-மகன் இரட்டை கொலை தொடர்பாக ஜூன் 24 ஆம் தேதி 10 காவலர்களை இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு
2020 – ஜூன் 30ஆம் தேதி வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
2020 ஜூலை 1ஆம் தேதி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை மற்றும் காவலர்கள் முத்துராஜா, வேல்முத்து, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், பால்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து 2020 ஜூலை 12ஆம் தேதி சிபிஐ விசாரணையை தொடங்கியது
2020 ஜூலை 18ஆம் தேதி மதுரை சிறையில் அடைக்கப்பட்ட சாத்தான்குளம் போலீஸார் 10 பேரிடமும் மனித உரிமைகள் ஆணையக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஜெயராஜ்- பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் சி.பி.ஐ வாக்குமூலம் பெற்றது.
இதற்கிடையே ஆகஸ்ட் 10ஆம் தேதி கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த காவலர் பால்துரை உயிரிழந்தார்.
2020 ஆகஸ்ட் 25ஆம் தேதி, ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாக மதுரை நீதிபதிகள் தெரிவித்தனர்.
2020 செப்டம்பர் 26ஆம் தேதி மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் 2,207 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ தாக்கல் செய்தது.
2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி, இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஆய்வாளரான ஸ்ரீதர், தான் அப்ரூவராக மாறுவதாக மனு அளித்தார். ஆனால், அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்த வழக்கில், 9 போலீஸாரும் பல முறை ஜாமீன் கேட்டும் ஒருவருக்கும் ஜாமீன் அளிக்கப்படவில்லை.
கடந்த 6 ஆண்டுகளாக மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த இரட்டை கொலை வழக்கில், 9 காவலர்களும் குற்றவாளிகள் என கடந்த மாதம் 23ம் தேதிதீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று 9 காவலர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
