Wednesday, December 17, 2025

அனல் பறக்கும் IPL மினி ஏலம்., CSK போடும் அதிரடி திட்டம் இது தான்

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் திருவிழாக்களுள் ஒன்றான ஐபிஎல் தொடர், 19ஆவது முறையாக வரும் மார்ச் 21ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. களத்தில் வீரர்கள் காட்டும் திறமை மிகவும் முக்கியம். அதை போலவே ஏலத்தில் அணிகள் எடுக்கும் முடிவுகளும் கோப்பையை வெல்வதற்கான பயணத்தில் முக்கிய பங்காற்றுகின்றன.

இந்த நிலையில், 31 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 77 வீரர்களைத் தேர்வு செய்ய 10 அணிகள் இன்று ஏலத்தில் போட்டியிடுகின்றன. வீரர்களுக்கான அடிப்படை ஏலத் தொகை 2 கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு வீரருக்கான அதிகபட்ச ஏலத் தொகை 18 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 43 கோடியே 40 லட்சம் ரூபாய் கையிருப்புடன், 9 வீரர்களை வாங்கும் நோக்கில் ஏலத்தில் களமிறங்குகிறது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளில் ஒன்றான சென்னை, கடந்த சீசனில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. 14 போட்டிகளில் 10 தோல்விகளை சந்தித்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. இதனால், இம்முறை அணியை முழுமையாக மறுசீரமைக்க சென்னை நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்றதைத் தொடர்ந்து, அவருக்கு மாற்றாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது பேட்டிங் வரிசையை வலுப்படுத்தினாலும், சுழற்பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் இடங்களில் இன்னும் குறைபாடு உள்ளது. சாம் கரண் மற்றும் பதிரனா விடுவிக்கப்பட்டுள்ளதால், வேகப்பந்துவீச்சையும் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நாதன் எல்லீசுக்கு துணையாக ஒரு வலுவான வேகப்பந்துவீச்சாளர் தேவைப்படுவதால், கேமரூன் கிரீன், நோர்க்கியா அல்லது ஜேசன் ஹோல்டர் ஆகியோரில் ஒருவரை சென்னை ஏலத்தில் எடுக்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடக்கூடிய பினிஷர் தேவையால், வெங்கடேஷ் ஐயரையும் அணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளது.

அஸ்வின் ஓய்வு பெற்றதாலும், ஜடேஜா விலகியதாலும், ஒரு தரமான சுழற்பந்துவீச்சாளர் அவசியமாகியுள்ளது. இதனால், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் பங்களிக்கக்கூடிய இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டனை ஒப்பந்தம் செய்ய சென்னை அணி பரிசீலிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், இடது கை தொடக்க வீரராக தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக்கையும் ஏலத்தில் எடுக்க சென்னை திட்டமிடலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Related News

Latest News