ஈரான் செய்த ‘சம்பவம்’! அதிரடியாக பின்வாங்கியது அமெரிக்கா? வெறியில் டிரம்ப்?

மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் போர் மேகங்களுக்கு மத்தியில், அமெரிக்கா தற்போது ஒரு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஈரான் மீதான தனது நேரடித் தாக்குதல்களை அமெரிக்கா தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இது போர் முடிவுக்கு வந்துவிட்டது என்பதற்கான அறிகுறி அல்ல என்றும், சர்வதேச கடல் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் ஏதேனும் கைவரிசையைக் காட்டினால், அதன் விளைவுகள் மிகவும் பயங்கரமானதாக இருக்கும் என்றும் வாஷிங்டன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகப் பொருளாதாரத்தையே ஈரான் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள மார்கோ ரூபியோ, வளைகுடா நாடுகளில் கப்பல் போக்குவரத்துகளுக்கு இடையூறு விளைவித்தால் அமெரிக்கா அமைதியாக இருக்காது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். அதே நேரத்தில், அமெரிக்க ராணுவத் தளபதி ஜெனரல் டான் கெய்ன் பேசுகையில், தங்களின் தற்போதைய நிதானத்தை ஈரான் பலவீனம் என்று கருதிவிடக் கூடாது என்றும், உத்தரவு கிடைத்தால் மீண்டும் தாக்குதலைத் தொடங்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்தச் சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் தன் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்ட, அதனை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த மோதலை “ஒரு சிறிய மோதல்” என்று வர்ணித்ததோடு, ஈரான் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு ஒரு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஈரானுக்குப் போரிட எந்த வாய்ப்பும் இல்லை என்றும் அவர் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கண்ணிவெடிகளைப் புதைத்து வைப்பதாகக் கூறி, அதற்கு எதிராக ஐநா பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டு வரவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. எரிசக்தி விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக உலக நாடுகள் பலவும் இந்தப் பதற்றத்தைக் குறைக்கச் சொல்லி வலியுறுத்தி வருகின்றன.

இந்த போர்ச் சூழலால் ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்துள்ளன. ஐரோப்பிய நாடுகளும் ஈரானின் இந்த நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கண்டனம் தெரிவித்துள்ளன. ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறினாலும், அமெரிக்காவின் “அதிகபட்ச அழுத்தம்” கொடுக்கும் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார். மனிதாபிமான உதவிகள் மற்றும் போர் நிறுத்தம் என ஒருபுறம் அமைதிப் பேச்சுக்கள் நடந்தாலும், நடுக்கடலில் எப்போது வேண்டுமானாலும் ஒரு பெரிய போர் வெடிக்கலாம் என்ற அச்சம் இன்னும் நீடிக்கிறது.

Related News

Latest News