அறுவைச் சிகிச்சை செய்தபோது அழுத பெண்ணிடம் கட்டணம் வசூலித்த மருத்துவமனை பற்றிய விசயம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் மிட்ஜ். இந்தப் பெண் தனது உடலில் உள்ள மச்சத்தை அகற்றுவதற்காக மருத்துவனையில் சேர்ந்தார். குறிப்பிட்ட நாளில் அவருக்கு அறுவைச் சிகிச்சைமூலம் மச்சம் அகற்றப்பட்டது.
அந்த அறுவைச்சிகிச்சையின்போது ஏற்பட்ட வலியைத் தாங்கமுடியாமல் சிறிது கண்ணீர்விட்டு அழுதுவிட்டார்.
அறுவைச்சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் பில் கொடுத்தது. அந்தப் பில் தொகையில், BRIEF EMOTION என்று குறிப்பிட்டு 11 அமெரிக்க டாலரைக் கட்டணமாகக் குறிப்பிட்டிருந்தது மருத்துவமனை நிர்வாகம்.
அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்திடமோ, சுகாதாரத்துறை அதிகாரிகளிடமோ புகார் தெரிவிக்கவில்லை. மாறாக, தன் ட்விட்டர் பக்கத்தில் மருத்துவமனை வழங்கிய பில்லைப் பதிவிட்டார்.
‘டாக்டர்கள் எப்படியெல்லாம் சம்பாதிக்கிறார்கள் பார்த்தீர்களா…என்பதைக் காண்பிப்பதற்காக மருத்துவமனை கொடுத்த பில்லைப் பதிவிட்டிருப்பதாக’ மிட்ஜ் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனையின் இந்தச் செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.