உலகளவில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் மண்ணில் அழியாமல் தங்கி, சுற்றுச்சூழல், மனிதர்கள், விலங்குகள் மற்றும் இயற்கைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. பிளாஸ்டிக் தயாரிப்பு மற்றும் அதை அகற்றும் செயல்முறைகள் காலநிலை மாற்றத்திற்கும் முக்கிய காரணங்களாக உள்ளன.
இந்த சூழலில், லான்செட் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் வெளியாகியுள்ள தகவல்கள் கவலை அளிப்பதாக உள்ளன. பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனப் பொருட்கள் மற்றும் மைக்ரோ பிளாஸ்டிக்கள் ஆஸ்துமா, புற்றுநோய், மாரடைப்பு, நீரிழிவு நோய், ஹார்மோன் சமநிலையின்மை போன்ற கடுமையான உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன.
கருப்பையில் இருக்கும் சிசு முதல் முதியவர்கள் வரை, வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் பிளாஸ்டிக் மாசுபாடு தீங்கு விளைவிப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. பிளாஸ்டிக் மாசுபாட்டால் உருவாகும் உடல்நலப் பிரச்சினைகளுக்காக உலகளவில் ஆண்டுதோறும் குறைந்தது 1.5 டிரில்லியன் டாலர் செலவிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது பிளாஸ்டிக் உற்பத்தி பல நூறு மடங்குகளாக அதிகரித்துள்ள நிலையில், தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்குகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான அளவிலேயே மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதன் விளைவாக சுமார் 8,000 மெகா டன் பிளாஸ்டிக் கழிவுகள் பூமியை கடுமையாக மாசுபடுத்தி வருகின்றன.
வரும் 2040ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் மாசுபாடு இரு மடங்கிற்கு மேல் சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் என்றும், உடனடி மற்றும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் புவி வெப்பமடைதல், காற்று மாசுபாடு மற்றும் நச்சுத்தன்மை தொடர்பான பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.
