வரதட்சணையை வாங்க மறுத்த மணமகன்

209
Advertisement

”கட்டிய சேலையோடு என்னோடு வா….காலம் பூராவும்
உன்னைக் கண் கலங்காமல் வாழவைக்கிறேன்” என்று சொல்லும்
காதலர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், நிச்சயிக்கப்பட்ட
திருமணங்களில் வரதட்சணைப் பிரதானமாக இடம்பெறுவது
தவிர்க்க முடியாததாகிவிட்டது.

‘வரதட்சணை வேண்டாம்’ எனச் சொன்னால், மாப்பிள்ளைக்கு
உடலில் ஏதோ குறைபாடு உள்ளது. அதனால்தான் வரதட்சணை
வேண்டாம் என்கிறார் எனப் புறம்பேசும் அளவுக்கு சமூகத்தில்
வரதட்சணை ஒரு அந்தஸ்துப் பொருளாக மாறியுள்ளது.

எனினும், வரதட்சணைக் கொடுக்கமுடியாமல் பல பெண்கள்
உரிய வயதில் திருமணம் நடக்காமலும், காலம் முழுவதும்
முதிர்கன்னிகளாகவே வாழும் நிலையும் நமது சமூகத்தில்
நிலவி வருகிறது.

இதில், கல்வியறிவு பெற்ற மாநிலமான கேரளா
முன்னணியில் உள்ளது- வரதட்சணைக் கொடுமை காரணமாகப்
பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வரதட்சணைக்
கொடுமையைக் கண்டித்து கேரளக் கவர்னர் முகமது ஆரிப் கான்
உண்ணாவிரதம் இருந்தார். அந்தளவுக்கு வரதட்சணைக் கொடுமை
கேரளாவில் தலைவிரித்தாடுகிறது.

இந்நிலையில், அதே கேரளா மாநிலத்தில் வரதட்சணை
வேண்டாமெனக் கூறி தனது மனைவிக்கு அவளது பெற்றோர்
வழங்கிய தங்க நகைகளை வேண்டாம் என்றுகூறி மேடையிலேயே
கழற்றி மாமனார் மாமியாரிடமே ஒப்படைத்துள்ளார் அம்மாநில
இளைஞரான சதீஷ்-

நாதஸ்வர இசைக்கலைஞரான சதீஷ் ஆலப்புழை மாவட்டம்,
நூர நாடு என்னும் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கும் அதே
மாவட்டத்தைச் சேர்ந்த சுருதி என்னும் பெண்ணும் பெற்றோர்
ஏற்பாட்டில் திருமணம் முடிவானது. நிச்சயதார்த்தத்தின்போதே
தனக்கு வரதட்சணை வேண்டாம் என்றுகூறிவிட்டார்.

இந்த ஜோடிக்கு 2021 ஆம் ஆண்டு, ஜுலை 15 ஆம் தேதி
கோவிலில் திருமணம் நடைபெற்றது. அப்போது தனது
பெற்றோர் அணிவித்த 50 பவுன் நகைகளுடன் மேடைக்கு வந்தார்
மணமகள். இதைக்கண்ட மணமகன் சதீஷ் அதிர்ச்சியடைந்தார்.

தனது கொள்கைக்கு மாறாக வரதட்சணையாக நகை அணிந்துவந்திருந்த
வருங்கால மனைவியிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.
அத்துடன், ”உனக்கு விருப்பமானால் இரண்டே இரண்டு வளையல்களை
மட்டும் அணிந்துகொள். மற்ற நகைகளைக் கழற்றி உன் பெற்றோரிடம்
கொடுத்துவிடு” என்றார்.

வருங்காலக் கணவரின் இந்த நற்குணத்தைப் பூரிப்புடன் ஏற்றுக்கொண்ட
மணமகள் திருமணம் நடந்து முடிந்த மறுகணமே தான் அணிந்திருந்த
50 பவுன் நகைகளைக் கழற்றித் தன் பெற்றோரிடம் கொடுத்தார்
21 வயதான சுருதி.

”என் மனைவி சுருதியே எனது சொத்து” என்று பெருமிதம் பொங்கக்
கூறுகிறார் 28 வயது இளைஞர் சதீஷ்.

சதீஷைப்போல் எல்லா மணமகன்களும் அமைந்துவிட்டால்
இளம்பெண்களின் வாழ்வில் என்றும் வசந்தம் வீசும்.

நெகிழ்ச்சியான இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
கேரளாவுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த நாட்டுக்கே முன்மாதிரியாக
அமைந்துள்ள மணமகன் சதீஷின் செயல்.