சுமார் 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு எத்தியோப்பியாவில் உள்ள ஹயலி குப்பி என்ற எரிமலை வெடித்து சிதறியுள்ளது. இந்த வெடிப்பு எத்தியோப்பியாவிலேயே அல்லாமல் இந்தியாவையும் பாதிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
வெடிப்பின் காரணமாக எழுந்த சாம்பல் மேகங்கள் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு வேகமாகப் பரவி வருகின்றன. மணிக்கு சுமார் 100 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் இந்த சாம்பல் மேகங்கள், எத்தியோப்பியாவைத் தாண்டி சிவப்பு கடல் வழியாக ஏமன் உள்ளிட்ட அரபு நாடுகளை தாக்கி தற்போது இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
ஸ்கைமெட் வானிலை நிறுவனம் தெரிவித்ததாவது, இந்த சாம்பல் மேகம் முதலில் குஜராத்தில் நுழைந்து பின்னர் ராஜஸ்தான், டெல்லி, வடமேற்கு மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை நோக்கி இரவு 10 மணிக்குள் வந்து சேரும் என கூறப்படுகிறது. பின்னர் இமயமலை பகுதி உள்ளிட்ட வட இந்திய பல பகுதிகளுக்கும் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த சாம்பல் மேகம் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வடஇந்தியாவை நோக்கி நகர்கிறது. இதனால் விமானப் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே டெல்லியில் காற்று மாசு நிலை கடுமையாக இருக்கும் நிலையில், இந்த சாம்பல் மேகம் நகரத்தை நோக்கி வரும் என்பதால் மக்கள் மத்தியில் அச்சம் உருவாகியுள்ளது.
இந்த எரிமலைச் சாம்பல் வளிமண்டலத்தின் பல ஆயிரம் மீட்டர் உயரத்தில் பயணம் செய்வதால் பொதுமக்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்படாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், விமான ஒழுங்குமுறை அதிகாரிகள், சாம்பல் மேகங்கள் இருப்பிடங்களைத் தவிர்த்து புதிய பாதைகள் மூலம் விமான பயணங்களை மாற்றி அமைக்குமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
