சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் மீண்டும் கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. காசா நகரின் மக்கள் அதிகமாக வசிக்கும் சேக் ரத்வான் பகுதியில் இஸ்ரேலிய ஆயுத தாங்கிகள் மற்றும் இராணுவ வாகனங்கள் நுழைந்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வான், கடல், தரை என முப்படை போர்களிலும் இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. ‘கடந்த இரண்டு வருடங்களில் நாம் எதிர்கொண்ட மிக மோசமான குண்டுவீச்சுகள் இவைதான்’ என காசா மக்கள் கூறுகின்றனர்.
தரைவழி தாக்குதலை சில தினங்களுக்கு முன் ஆரம்பித்திருந்த இஸ்ரேல், அதை மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. நேற்று மட்டும் நடைபெற்ற தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்ததாகவும், கடந்த சில நாட்களில் சுமார் 150 முறை விமானப்படை மற்றும் பீரங்கிப் படைகள் காசா மீது தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களில் பலஸ்தீனியர்களின் குடியிருப்புகள், கூடார முகாம்கள், வானுயர்ந்த கட்டடங்கள் உள்ளிட்டவை தரைமட்டமாகியுள்ளன. இதனால் காசா மக்களின் 90%க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மருத்துவமனைகளும் தாக்குதலில் சேதமடைந்துள்ளன.
காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்ததன்படி, 2023 அக்டோபர் 7 முதல் இதுவரை 65,062 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 165,697 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் மக்கள் வெளியேற புதிய பாதையையும் இஸ்ரேல் திறந்துள்ளது. இதற்கிடையே, சர்வதேச நாடுகள் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துமாறு வலியுறுத்தி, தரைவழித் தாக்குதல்களை கடுமையாக கண்டித்துள்ளன. மேலும், ஐ.நா. இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
