இன்று தமிழகத்தில் திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனைப்போலவே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தது.
தற்போது எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
செப்டம்பர்16,17,18,19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். குறிப்பாக , 17 முதல் 19 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி,சற்று குறைவாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
