Sunday, January 25, 2026

தங்கம் செய்யப் போகும் சம்பவம் ! 2026-ல் இது தான் விலை! உஷாரா இருங்க மக்களே!

தங்கம்.. சாமானிய மக்களின் சேமிப்பு, நடுத்தர வர்க்கத்தின் கௌரவம், பெண்களின் கனவு! ஆனால், இனி தங்கம் என்பது வெறும் கனவாக மட்டுமே மாறிவிடுமோ என்கிற அச்சம் இப்போது நம் ஒவ்வொருவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது. ஏற்கனவே ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, இந்த ஆண்டு இறுதிக்குள் யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு இமாலய உச்சத்தைத் தொடப்போவதாக ஒரு அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது.

உலகளாவிய சந்தை ஆய்வு நிறுவனமான ‘குளோபல் டேட்டா’ (GlobalData) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை, ஒட்டுமொத்த முதலீட்டாளர்களையும், பொதுமக்களையும் ஒருசேர அதிர வைத்திருக்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் அசாதாரணமான அரசியல் சூழல்கள் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலைக் கணிப்பை அந்த நிறுவனம் தற்போது பல மடங்கு உயர்த்தியுள்ளது. அதாவது, 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போதைய நிலையில் இருந்து சுமார் 45 சதவீதம் முதல் 135 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 6,100 டாலர் முதல் 6,700 டாலர் வரை எட்டக்கூடும் எனத் தெரிகிறது. இதை இந்திய சந்தைப்படி கணக்கிட்டுப் பார்த்தால், உங்கள் இதயம் ஒரு நிமிடம் நின்று துடிக்கும். ஆம்.. வரும் டிசம்பர் மாதத்திற்குள் 10 கிராம் தங்கம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாம்! இதன் பொருள், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒன்றரை லட்சத்தைத் தாண்டி, ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என்ற மிரட்டலான விலைக்கு விற்பனை செய்யப்படலாம்.

தங்கம் ஒரு பக்கம் என்றால், வெள்ளியின் விலை யாரும் ஊகிக்க முடியாத வகையில் எகிறப்போகிறது. ஒரு கிலோ வெள்ளி 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் முதல் 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகக்கூடும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது வெள்ளியில் மட்டும் சுமார் 135 சதவீதம் வரை லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாம். ஏற்கனவே தங்கம் 5,000 டாலரையும், வெள்ளி 100 டாலரையும் மிக வேகமாகத் தாண்டிவிட்டதால், இந்த புதிய இலக்குகள் எட்டப்படுவது உறுதி என நிபுணர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

மலைக்க வைக்கும் இந்த விலை உயர்வுக்குப் பின்னால் இருக்கும் அந்த ரகசிய மர்மம் என்ன தெரியுமா? முதலாவதாக, உலகளாவிய அரசியல் பதற்றங்கள்! குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா விடுத்துள்ள புதிய வர்த்தக வரி மிரட்டல்கள், உலக முதலீட்டாளர்களைப் பாதுகாப்பான புகலிடமான தங்கத்தை நோக்கித் தள்ளியுள்ளது. இரண்டாவதாக, வெள்ளிக்கான தட்டுப்பாடு! இன்றைய நவீன உலகில் சூரிய ஒளி மின்சக்தி தகடுகள் மற்றும் மின்சார வாகனங்களின் தயாரிப்பில் வெள்ளி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததால் வெள்ளியின் விலை வரலாறு காணாத அளவில் எகிறப்போகிறது.

மேலும், போர்க்கால சூழல்கள் மற்றும் பொருளாதார மந்தநிலை அச்சம் காரணமாக, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்கத்தைத் தங்களின் பாதுகாப்புக் கேடயமாகச் சேமித்து வருகின்றன. இதனால் சந்தையில் தங்கத்திற்கான தட்டுப்பாடு அதிகரித்து விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்தத் தடாலடி விலை உயர்வு உங்கள் வீட்டுத் திருமணத் திட்டங்களை அல்லது முதலீடுகளை எப்படிப் பாதிக்கப்போகிறது என்பதை இப்போதே திட்டமிடுவது நல்லது.

Related News

Latest News