செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :-
பிரதமர் மோடி தமிழகம் வந்ததும் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது. எங்களும் மக்கள் வெள்ளம், மக்கள் கடல்போல காட்சியளிக்கிறார்கள். இதுவே இந்த கூட்டணியின் வெற்றிக்குச் சான்று.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே கிடையாது. மக்களை வாட்டிவதைக்கும் அரசு தேவையா? ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? மு.க. ஸ்டாலின் இந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் அவர் செய்தது ஒன்றே ஒன்றுதான் ஊழல்.
ஸ்டாலின் குடும்பம் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக இருக்கிறது. ஸ்டாலினுக்கு பிறகு முதல்வராக உதயநிதி வர வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் திமுகவில் உழைத்தவர்கள் தெருவில் இருக்கிறார்கள்.
இனி எந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெறாது. திமுகவுக்கு இது இறுதித் தேர்தல். தீய சக்தி திமுகவை வீழ்த்துவோம். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவோம்.
குடும்ப வாரிசுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல், குடும்ப ஆட்சிக்கு ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டுகிற தேர்தல். வரும் தேர்தலில் 210 இடங்களில் எங்கள் கூட்டணி வெல்லும். அதிமுக ஆட்சியமைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
