கடன் வாங்குவது எவ்வளவு சுலபமோ, ஒருவேளை சூழ்நிலை காரணமாக அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போகும் போது, வசூல் முகவர்கள் அதாவது ‘ரிகவரி ஏஜென்ட்ஸ்’ கொடுக்கும் டார்ச்சர் அவ்வளவு கொடுமையானது. கெட்ட வார்த்தைகளில் பேசுவது, நடுராத்திரியில் போன் செய்வது எனப் பல அத்துமீறல்கள் நடந்து வருகின்றன.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி இப்போது ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இனி தங்கள் இஷ்டத்திற்கு ரிகவரி ஏஜென்ட்களை ஏவி விட முடியாது. புதிய விதிகளின்படி, ஒரு வசூல் முகவர் உங்களைத் தொடர்பு கொள்ள வேண்டுமானால், காலை 8 மணி முதல் மாலை 7 மணிக்குள் மட்டுமே பேச வேண்டும்.
அதுவும் முறையான அடையாள அட்டை மற்றும் வங்கியின் அங்கீகாரக் கடிதத்தை அவர் வைத்திருக்க வேண்டும். மிக முக்கியமாக, உங்கள் வீட்டில் ஒரு துக்க நிகழ்ச்சியோ அல்லது திருமண விசேஷமோ நடக்கும் போது, உங்களையோ உங்கள் உறவினர்களையோ தொடர்பு கொள்ளவே கூடாது என RBI மிகத் தெளிவாகக் கூறியுள்ளது.
இன்று பலரும் செல்போன் வாங்குவதற்காக லோன் எடுக்கிறார்கள். தவணை கட்டத் தவறினால், உடனே அந்தப் போனை வங்கிகள் முடக்கி விடுகின்றன. இனி அப்படிச் செய்ய முடியாது. ஒருவேளை தவணை கட்டவில்லை என்றால், 90 நாட்களுக்குப் பிறகு தான் போனை முடக்க முடியும்.
அதற்கு முன்னதாக முறையான நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும். ஒருவேளை வங்கி தவறுதலாக உங்கள் போனை முடக்கினால், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 250 ரூபாய் வீதம் உங்களுக்கு வங்கி நஷ்டஈடு வழங்க வேண்டும் என அதிரடி காட்டுகிறது RBI. இனி ரிகவரி ஏஜென்ட்கள் போனில் பேசும் போது ஆபாசமாகப் பேசுவதோ, மிரட்டுவதோ, சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
வங்கிகள் அனைத்து வசூல் அழைப்புகளையும் பதிவு செய்து, குறைந்தது ஆறு மாதங்களுக்குப் பாதுகாத்து வைக்க வேண்டும். ஏஜென்ட்களுக்கு அதிக கமிஷன் கொடுத்து, அவர்களைத் தவறான முறையில் வசூல் செய்யத் தூண்டும் வங்கிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், அனைத்து ரிகவரி ஏஜென்ட்களும் இனி IIBF சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதாவது, ஒரு வாடிக்கையாளரிடம் எப்படி கண்ணியமாகப் பேச வேண்டும் என்கிற பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே இனி இந்த வேலைக்கு வர முடியும். ரிகவரி ஏஜென்ட்களால் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், வங்கிகள் அதற்கு நஷ்டஈடு வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் லோன் வாங்கியவர்களுக்கு ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு கவசமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடன் வாங்குவது எவ்வளவு முக்கியமோ, அதைத் திருப்பிச் செலுத்துவதும் ஒரு குடிமகனின் கடமை. ஆனால், அதற்காக ஒருவரின் சுயமரியாதையைச் சிதைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதை இந்த விதிகள் உறுதி செய்துள்ளன.
