இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கிய புதிய டாடா சியரா கார் கடந்த நவம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த காருக்கான முன்பதிவுகள் கடந்த டிசம்பர் மாதத்தில் தொடங்கின.
முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே 70 ஆயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் டாடா சியரா காரை முன்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, ஜனவரி 15 முதல் வாடிக்கையாளர்களுக்கு காரின் டெலிவரி வழங்கப்படும் என டாடா நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று முதல் புதிய டாடா சியரா காரின் டெலிவரி பணிகள் தொடங்கியுள்ளன.
காரை பெற்ற வாடிக்கையாளர்கள் பலரும் தங்களின் டெலிவரி அனுபவங்களை யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக டாடா சியரா காரின் டெலிவரி வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
புதிய டாடா சியரா கார் மொத்தம் 7 வேரியண்ட்களில் கிடைக்கிறது. அவை ஸ்மார்ட் ப்ளஸ், ப்யூர், ப்யூர் ப்ளஸ், அட்வென்ஜர், அட்வென்ஜர் ப்ளஸ், அக்ளாம்ப்ஸீடு மற்றும் அக்ளாம்ப்ஸீடு ப்ளஸ் ஆகும். இதில் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை 11.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், டாப் வேரியண்டின் விலை 21.29 லட்ச ரூபாயாக உள்ளது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
இன்ஜின் விருப்பங்களைப் பொருத்தவரை, 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று வகையான இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ்கள் இடம்பெற்றுள்ளன.
பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தவரை, லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, இபிடி உடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் 6 ஏர்பேக்குகள் ஆகியவை புதிய டாடா சியரா காரின் முக்கியமான பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன.
