நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘வா வாத்தியார்’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் முன்னதாகவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இருப்பினும், வெளியீட்டிற்கு தயாராக இருந்தும் இந்த படம் நீண்ட காலமாக திரைக்கு வராமல் தாமதமாகி வருகிறது.
இதற்குக் காரணம், இப்படத்தை தயாரித்துள்ள ஸ்டுடியோ க்ரீன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய சட்ட சிக்கல் ஆகும். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஞானவேல் ராஜா, திவாலான தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தரிடமிருந்து ரூ.21 கோடி கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. அந்த தொகையை திருப்பிச் செலுத்தும் வரை படத்தை வெளியிடக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டுடியோ க்ரீன்ஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விருப்பமில்லை என தெரிவித்து, அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், ரூ.3 கோடியே 75 லட்சம் ரூபாயை செலுத்த தயாராக இருப்பதாக தெரிவித்து, படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஞானவேல் ராஜா தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் படத்தின் மீதான தடையை நீக்க மறுத்தது. மேலும், ‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் உரிமைகளை ஏலத்தில் விடும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
